போரூர் ரவுண்டானா மேம்பாலம் 25ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்கு வரும்: பொதுப்பணித் துறை அறிவிப்பு

சென்னை:  சென்னை போரூர் ரவுண்டானா பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 25ம் தேதி திறந்துவைப்பார் என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கிண்டி – பூந்தமல்லி நெடுஞ்சாலை, குன்றத்தூர் – போரூர் சாலை, ஆற்காடு சாலை ஆகிய மூன்று முக்கிய சாலைகளை இணைக்கும் மிகப்பெரிய சந்திப்பாக போரூர் ரவுண்டானா விளங்கி வருகிறது. இந்த சாலைகளின் வழியே பூந்தமல்லி, வடபழனி, குன்றத்தூர், கிண்டி மார்க்கமாக, நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் வாகனங்களில் செல்கின்றனர்.

இதன் காரணமாக காலை, மாலை மட்டுமின்றி, பெருமான்மை நேரங்களில் போரூர் சந்திப்பு கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்தித்து வருகிறது. இதை போக்குவதற்காக, 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியின்போது போரூர் ரவுண்டானாவில் இருபுறமும் தலா ஏழரை மீட்டர் சர்வீஸ் சாலையுடன், 480 மீட்டர் நீளம், 372 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற தொடங்கியது.

ஆனால், 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், மேம்பாலம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டடு, மிகவும் தாமதமாக 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் பணிகள் நடைபெற ஆரம்பித்தது. இதையடுத்து, தற்போது சிறு சிறு வேலைகளை தவிர பெரும்பாலான பணிகள் நிறைவுற்று தயார் நிலைக்கு காத்திருக்கிறது போரூர் ரவுண்டானா மேம்பாலம். இந்நிலையில், திங்கட்கிழமை இரவு சென்னையில் பெய்த மழை காரணமாக போரூர் ரவுண்டானா கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. பொறுமையிழந்த வாகன ஓட்டிகள், இன்னும் திறக்கப்படாத பாலத்தின் மீதேறி வாகனங்களில் செல்லத் தொடங்கினர்.

இதை போக்குவரத்து போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், நெரிசலை தீர்க்க வேறு எதுவும் வழியில்லாததால், போரூர் மேம்பாலம் தற்காலிகமாக திறந்துவிடப்பட்டது. நெரிசல் குறைந்ததும் மேம்பாலம் உடனடியாக மூடப்பட்டது. இதையடுத்து பாலத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில், போரூர் பாலத்தை ஆய்வு செய்த பொதுப்பணித்துறையினர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 25ல் பாலத்தைத் திறந்துவைப்பார் என்று அறிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com