இந்தியாவில் கைவினைப் பொருள்கள் ஏற்றுமதி அதிகரிப்பு: பயிலரங்கில் தகவல்

இந்தியாவில் கைவினைப் பொருள்களின் ஏற்றுமதி 2015-16 ஆம் நிதியாண்டில் ரூ.21.35 கோடியாக அதிகரித்துள்ளது என்றார் மத்திய கைவினைப் பொருள்கள் அபிவிருத்தி ஆணைய உதவி இயக்குநர் எல்.பாலு.

இந்தியாவில் கைவினைப் பொருள்களின் ஏற்றுமதி 2015-16 ஆம் நிதியாண்டில் ரூ.21.35 கோடியாக அதிகரித்துள்ளது என்றார் மத்திய கைவினைப் பொருள்கள் அபிவிருத்தி ஆணைய உதவி இயக்குநர் எல்.பாலு.

பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் இன்று நடைபெற்ற கைவினைக் கலைஞர்களுக்கான விழிப்புணர்வு முகாமில் எல்.பாலு பேசியதாவது:
திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை பாய்கள், வாகைகுளம் பித்தளை பொருள்கள், வாழைநார் மற்றும் கற்றாழைநார் பொருள்கள், மரவண்ண கடைசல் பொருள்கள், மண்பாண்டங்கள், ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு கைவினைப் பொருள்கள் உற்பத்தியாகின்றன. கைவினைக் கலைஞர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள் இம் மாதம் 31 ஆம் தேதிக்குள் காலாவதியாக உள்ளது.

இந்தநிலையில் மத்திய அரசின் சார்பில் ஆதார் எண் இணைக்கப்பட்ட நவீன அடையாள அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்ளிட்ட மொத்தம் 8 தென்மாவட்ட பகுதிகளில் 23 ஆயிரம் பேருக்கு இந்த அட்டை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கெனவே 12 ஆயிரம் பேர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். இதற்கு விண்ணப்பி்க்க 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை, பழைய அடையாள அட்டை, விண்ணப்ப மனு ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம், நாகர்கோவிலில் உள்ள மத்திய கைவினைப் பொருள்கள் அபிவிருத்தி ஆணைய உதவி இயக்குநர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். இந்த அட்டையின் மூலம் மட்டுமே கைவினைக் கலைஞர்கள் மத்திய-மாநில அரசுகளின் நலத்திட்டங்கள், கடனுதவிகளைப் பெற முடியும். புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க இம் மாதம் 31 ஆம் தேதி கடைசி நாளாகும்.

இந்தியாவில் ஓராண்டில் ரூ.41 ஆயிரம் கோடிக்கு கைவினைப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், ஜெர்மனி, கிழக்காசிய நாடுகள் போன்றவற்றுக்கு அதிகளவில் ஏற்றுமதியாகின்றன. 1985-86 ஆம் ஆண்டில் ரூ. 356 கோடிக்கு இந்திய கைவினைப் பொருள்கள் ஏற்றுமதியாகிய நிலையில் 2015-16 ஆம் நிதியாண்டில் ரூ.21 ஆயிரத்து 356 கோடிக்கு ஏற்றுமதியாகியுள்ளது. சர்வதேச பொருளாதார மந்தநிலையிலும் கைவினைப் பொருள் ஏற்றுமதியில் எந்தப்பாதிப்பும் இல்லை.

கைவினைப் பொருள் உற்பத்தியால் பெண்கள் அதிகளவில் வேலைவாய்ப்பு பெறுகிறார்கள். கிராமப்புறத்தினர் நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்தல் குறைக்கப்படுகிறது. பொருளாதாரம் மேம்படுவதுடன், நாட்டுக்கு அன்னியசெலவானியும் அதிகளவில் கிடைக்க வழி செய்கிறது. கைவினைப் பொருள்களுக்கு மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பில் சில சலுகைகள் கிடைக்க கைவினைப் பொருள்கள் ஏற்றுமதிக் கழகம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கைவினைக் கலைஞர்களுக்கு சிறப்புக் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. இதன்மூலம் கல்வி உதவித்தொகை, விபத்து இழப்பீட்டுத்தொகை உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன என்றார் அவர்.

பயிற்சி முகாமில் ஓவியக்கலைஞர் கலைவாசல் வை.கோபால் வரவேற்றார். மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தார். கைவினைக் கலைகள் ஊக்குவிப்பு அதிகாரி ரூப் சந்தர் அறிமுகவுரையாற்றினார். அ.ரா.உமாமகேஸ்வரி நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com