டயாலிசிஸ் சிகிச்சையின்போது 3 பேர் உயிரிழப்பு: மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி விலக வலியுறுத்தல்

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின் 3 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு தார்மீக

புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சையின் 3 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு தார்மீக பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பதவி விலக வேண்டும் என்று புதுச்சேரி சட்டப்பேரவை அதிமுக உறுப்பினர் அன்பழகன் வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் மேலும் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியது: பொதுமக்களின் உயிர் சம்பந்தமான பல்வேறு பிரச்னைகளில் புதுவை அரசு அலட்சியமாக செயல்படுகிறது. குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் யேனாம் தொகுதியை சேர்ந்தவர் என்பதால் மாதம் ஓரிரு முறைகள் மட்டுமே புதுவைக்கு வருகிறார். இதனால் துறையின் செயல்பாட்டில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

புதுவை அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் குறைவாக உள்ளனர். எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் பற்றாக்குறையாக உள்ளது என்று பல முறை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். ஒரு மாதத்துக்குள் இவற்றை சரி செய்யவில்லையென்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக மல்லாடி கிருஷ்ணாராவ் சொன்னார். ஆனால் 3 மாதங்கள் ஆகிவிட்டன.

இந்த நிலையில் 9-ஆம் தேதி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்தபோது 3 பேர் இறந்தனர். இதற்கு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். மேலும் தார்மீக பொறுப்பேற்று தனது பதவியை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா செய்ய வேண்டும்.

இது தொடர்பாக அரசு அமைத்துள்ள விசாரணைக் குழு கண்துடைப்பு நடவடிக்கை. நீதிபதி தலைமையில் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவின் மூலம் விசாரணை நடத்த வேண்டும். இந்த பிரச்னையில் எந்த விசாரணையுமின்றி மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவற்றை ரத்து செய்ய வேண்டும்.

மருத்துவமனையில் இந்திய மருத்துவக் கவுன்சில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். மருத்துவமனையில் போதிய நிபுணர்கள் கிடையாது, கருவிகள் கிடையாது. டயாலிசிஸ் பிரிவில் டி.எம். படித்த சிறுநீரகவியல் நிபுணர்கள் கிடையாது. தனக்கு அதிகாரம் இருக்கிறது எனக் கூறும் துணைநிலை ஆளுநர், இதில் கவனம் செலுத்தி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் அவர் இதுவரையில் அமைச்சர், துறை இயக்குநர், செயலர் ஆகியோரை அழைத்துக் கூட பேசவில்லை.

 புதுவை அரசுக்கு மக்களை பற்றி அக்கறையில்லை. மலிவான விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. 3 பேரும் மின்சாரம் நின்றவுடன், நுரையீரலில் நீர்கோர்த்து துடிதுடித்து இறந்துள்ளனர். சிறுநீரகவியல் நிபுணர் இருந்திருந்தால் அவர் கவனித்து இருப்பார்.

உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும். மேலும் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும். மருத்துவமனையில் இந்திய மருத்துவக் கவுன்சில் மறுஆய்வு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் மருத்துவமனையை மூடவும் உத்தரவிட வேண்டும். தற்போது அரசு மருத்துவமனைகளில் முன்னாள் முதல்வர், தற்போதைய முதல்வர், துணைநிலை ஆளுநர் என 3 கோஷ்டிகளாக மருத்துவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

புதுவையில் பேனர் வைக்க தடை விதித்து முதல்வர் வெளியிட்ட உத்தரவை அவரது கட்சியினரே மதிப்பதில்லை என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com