சிறை வளாகத்தில் குண்டு வீச்சு: சிரியாவில் 16 பேர் பலி

சிரியாவில் சிறை வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் 16 பேர் கொல்லப்பட்டனர். சிரியா

சிரியாவில் சிறை வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சில் 16 பேர் கொல்லப்பட்டனர். சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு இது தொடர்பாக சனிக்கிழமை தெரிவித்ததாவது:

நாட்டின் வட மேற்குப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இத்லிப் நகரில் நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 16 பேர் பலியாகினர். ரஷிய போர் விமானங்கள் அந்தத் தாக்குதலை நிகழ்த்தியதாகத் தகவல் கிடைத்துள்ளது.

குண்டு வீச்சை நேரில் பார்த்தவர்கள் போர் விமானத்தின் தோற்றத்தைக் குறித்து அளித்த விவரங்களின் அடிப்படையில் தாக்குதலை நிகழ்த்தியது ரஷிய போர் விமானமாக இருக்கலாம் என்று தெரிகிறது. வேறு பல தகவல்கள் மூலம் அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பலி எண்ணிக்கையைத் தவிர, பலியானவர்கள் குறித்த பிற விவரம் எதுவும் சரிவரத் தெரியவில்லை.

குண்டு வீச்சுக்குப் பிறகு சிறைச் சாலை சுவர்கள் உடைந்ததால் கைதிகள் வெளியே தப்பியோட முயற்சி செய்தனர் என்றும் சிறைக்காவலர்கள் அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட்டதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. எனினும் அந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் குறித்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

இத்லிப் நகரம் கடந்த 2015-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பயங்கரவாதக் குழுவான அல்-காய்தாவின் துணை அமைப்பாகச் செயல்பட்டு வரும் அல்-நுஸ்ரா முன்னணிக்கு மிக நெருக்கமான ஃபதே அல்-ஷாம் தலைமையிலான குழுக்கள் இத்லிப் நகரைக் கைப்பற்றித் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

இத்லிப் மாகாணத்தின் தலைநகராக உள்ள இத்லிப் மட்டுமல்லாமல், ஏறக்குறைய அந்த மாகாணம் முழுவதும் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வருகிறது. இந்தக் காரணத்தாலேயே சிரியா போர் விமானங்களும், அதற்கு ஆதரவாக ரஷிய போர் விமானங்களும் அங்கு தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி வருகின்றன.

மேலும், இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையின் தாக்குதல் நடவடிக்கை இடையே, இத்லிப்பிலும் தாக்குதல் நடத்துவது வழக்கமாக உள்ளது. சிரியா அரசுக்கு எதிராக கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் கிளர்ச்சியில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்திருக்கிறது.

கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே நிகழ்ந்து வந்த சண்டை ரஷியா முன்னிலையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டது. எனினும், சில இடங்களில் சிறுசிறு மோதல்கள் நிகழ்ந்து வருவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன.

போர் நிறுத்த அறிவிப்பு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைக்குப் பொருந்தாது என்பதால் பயங்கரவாத நிலைகள் என்று கருதக் கூடிய இடங்களில் சிரியா போர் விமானங்கள் மட்டும் அல்லாமல், ரஷியா மற்றும் அமெரிக்க கூட்டுப் படை விமானங்களும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com