தாமிரவருணியில் தண்ணீர், மணல் எடுக்க தடைச் சட்டம் நெல்லை ஆர்ப்பாட்டத்தில் ஜவாஹிருல்லாஹ் வலியுறுத்தல்

பெருநிறுவனங்கள் தாமிரவருணி தண்ணீரை உறிஞ்சவும், தாமிரவருணியில் எந்தப் பகுதியிலும் மணல் அள்ளவும் நிரந்தர

பெருநிறுவனங்கள் தாமிரவருணி தண்ணீரை உறிஞ்சவும், தாமிரவருணியில் எந்தப் பகுதியிலும் மணல் அள்ளவும் நிரந்தர தடைச்சட்டம் இயற்றப்பட வேண்டும் என திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் வலியுறுத்தினார்.

கங்கை கொண்டானில் உள்ள தனியார் குளிர்பான ஆலைகளுக்கு தாமிரவருணி தண்ணீரை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் சனிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லாஹ் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் பிரதான பாசனத்துக்கும், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது தாமிரவருணி தண்ணீர் மட்டுமே. தமிழகத்தில் உற்பத்தியாகி, தமிழகத்தில் உள்ள கடலில் கலக்கும் நதியாக இருப்பது தாமிரவருணி மட்டுமே. கர்நாடகத்தில் உற்பத்தியாகி வரும் காவிரியில் தமிழர்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது. காவிரியில் தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தற்கொலை செய்து வருகின்றனர்.

காவிரிக்காக கர்நாடகத்துக்கு தொடர்ந்து மோதல், முல்லைப்பெரியாறு, பவானியிóன் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் கேரள அரசுடன் மோதல் போக்கு நீடிக்கிறது. இதுமட்டுமல்லாது, பாலாறு விவகாரத்தில் ஆந்திரத்துடன் மோதல் நீடிக்கிறது. தமிழகத்தின் தண்ணீர் உரிமையை பெற 3 மாநில அரசுகளுடன் ஆண்டுகள் பல கடந்து தொடர்ந்து போராடி வருகிறோம்.

இந்தச் சூழலில் மாநிலத்து நதியாக விளங்கும் தாமிரவருணியை பெருநிறுவனங்கள் கொள்ளையடிக்க தமிழக அரசே வழிவகை செய்திருப்பது வேதனைக்குரியது. கங்கை கொண்டானில் இயங்கி வரும் தனியார் குளிர்பான ஆலைகள் தொடக்கத்தில் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் தண்ணீர் எடுத்து வந்த நிலை மாறி, 10 லட்சம் லிட்டருக்கு மேல் எடுத்து வருகின்றன.

இதுமட்டுமல்லாது, தாமிரவருணியில் மாநகராட்சியின் கழிவுநீர் நாள்தோறும் பல லட்சம் லிட்டர் கணக்கில் கலக்கப்படுகிறது. தொடர்ந்து நடைபெறும் மணல் கொள்ளையால் தாமிரவருணி சுருங்கிவிட்டது. 6 மாதங்களுக்கு 54 ஆயிரம் யூனிட்கள் அனுமதி அளித்தால் 3 மாதங்களில் 60 ஆயிரம் யூனிட்டுக்கு மேல் அள்ளிவிடுகின்றனர்.

இந்திய நதிகளில் பிரம்மபுத்திராவைத் தவிர வேறு எங்கும் உபரிநீரே இல்லை என மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், தாமிரவருணியில் உபரிநீர் இருப்பதாகக் கூறுவது பன்னாட்டு நிறுவனங்ளுக்கு அடிமையாக இருக்கும் போக்கை எடுத்துக் காட்டுகிறது. எனவே, தாமிரவருணியிóல மணல் அள்ளவோ, தண்ணீர் எடுக்கவோ நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்காத வகையில் நிரந்தர தடைச் சட்டம் இயற்ற வேண்டும் என்றார் அவர்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொறுப்பு குழுத் தலைவர் உஸ்மான்கான் தலைமை வகித்தார். மனித நேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஜே.எஸ். ரிபாயீ ரஷாதி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாநிலச்செயலர் மைதீன் சேட்கான்,  சமூக செயல்பாட்டாளர் முகிலன், பூவூலகின் நண்பர்கள் ஒருங்கிணைப்பாளர் சுந்தர்ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாவட்டச் செயலர் கே.ஜி. பாஸ்கரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள், பெண்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com