மீன்பிடி படகுகளுக்கு ரூ. 40 லட்சம் மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல்தேசிய மீனவர் பேரவை தகவல்

நாடு முழுவதும் மீன்பிடி படகுகளுக்கு ரூ. 40 லட்சம் மானியம் வழங்குவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

நாடு முழுவதும் மீன்பிடி படகுகளுக்கு ரூ. 40 லட்சம் மானியம் வழங்குவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்று தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ தெரிவித்தார்.

 இதுகுறித்து அவர் புதுவையில் செய்தியாளர்களிடம் கூறியது: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் ஆகியோரை தேசிய மீனவர் பேரவை தலைவர் இளங்கோ சில நாள்களுக்கு முன்பு சந்தித்து பேசினோம்.

 6 மாவட்ட மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிப்பதில் உள்ள பிரச்னை குறித்து தெரிவித்தோம். இலங்கை வசம் உள்ள இந்திய மீனவர்களின் 140 படகுகளில் சுமார் 40 படகுகள் பாழாகி விட்டது. அனைத்து படகுகளையும் உடனே விடுவிக்க ஆவன செய்ய வேண்டும். இலங்கை படையால் கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோ குடும்பத்துக்கு ரூ. 1 கோடி வழங்க வேண்டும். கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று கோரினோம். அப்போது இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் பிரதமர் மோடி இலங்கை செல்வார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 படகுகள் வாங்க ரூ. 80 லட்சம் வரை செலவாகும் என்பதால் மீனவர்கள் சொத்து ஜாமீன் வழங்க இயலாது. எனவே படகையே ஜாமீனாக வைத்துக் கொண்டு நபார்டு அல்லது என்சிடிசி மறு கடனுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தோம். தொடர் முயற்சியின் காரணமாக அதற்கான அரசாணை கடந்த மார்ச் 9-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

 அரசாணையின் நகலை வேளாண் அமைச்சர் எங்களிடம் அளித்தார். இந்த அரசாணையின்படி படகு ஒன்றுக்கு மத்திய அரசு ரூ. 40 லட்சம் மானியம் வழங்கும். மேலும் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் கூடுதல் மானியம் வழங்கலாம் என்றும் அதற்குரிய திட்டத்தை சமர்ப்பிக்கும்படி கடற்கரை மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அதே போல் இந்த புதிய மத்திய அரசின் ஆழ்கடல் மீன்பிடி ஊக்குவிப்பு திட்டம் இந்திய  இலங்கை மீனவர் பிரச்னைக்கு உள்ளாகும் 6 மாவட்ட மீனவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அதிக படகுகள் வாங்க மானியத்துடன் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்யுமாறு தமிழக  புதுச்சேரி அரசுகளை கேட்டுக் கொள்வதாகவும் மத்திய வேளான் அமைச்சர் தெரிவித்தார்.

அதற்குரிய சிறப்பு திட்ட நிதியாக உடனடியாக ரூ. 100 கோடி மத்திய அரசால் வழங்கப்படும். படிப்படியாக இத்திட்டத்திற்காக ரூ. 1000 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். காரைக்கால்  நாகப்பட்டினம் பகுதியில் கடல் மீன்பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி வளாகம் கட்டவும் அமைச்சர்கள் உறுதியளித்தனர் என்றார் இளங்கோ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com