எரிபொருள் விற்பனையாளர்கள் வேலைநிறுத்தம்: உ.பி.யில் பெட்ரோல் நிலையங்கள் மூடல்

உத்தரப் பிரதேசத்தில் முறைகேடாக இயங்கிய பெட்ரோல் நிலையங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து எரிபொருள்

லக்னெள: உத்தரப் பிரதேசத்தில் முறைகேடாக இயங்கிய பெட்ரோல் நிலையங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததைக் கண்டித்து எரிபொருள் விற்பனையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக, மாநிலத்தில் பெரும்பாலான பெட்ரோல் நிலையங்கள் இயங்கவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்ப இயலாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் அரசு அதிகாரிகள் அண்மையில் ஆய்வு நடத்தினர். அப்போது 11 பெட்ரோல் நிலையங்கள், லிட்டருக்கு 50 மி.லி. எரிபொருளைக் குறைத்து வழங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்தது கண்டறியப்பட்டது.

இந்த முறைகேட்டை அரங்கேற்றுவதற்கு தகுந்த வகையில் எரிபொருள் நிரப்பும் இயந்திரங்களில் சில திருத்தங்களை அவர்கள் செய்திருந்ததும் தெரிய வந்தது. இதன் மூலம் மாதந்தோறும் பல லட்சக்கணக்கான ரூபாயை சட்டவிரோதமாக சம்பந்தப்பட்ட பெட்ரோல் நிலையங்கள் ஈட்டி வந்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து இரு பெட்ரோல் நிலையங்களின் உரிமங்கள் தாற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தில்லியில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், உத்தரப் பிரதேசத்தில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் அதிரடி சோதனை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளை எதிர்த்து உத்தரப் பிரதேசத்தில் எரிபொருள் விற்பனையாளர்கள் பெரும்பாலானோர் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகன ஒட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு எட்டப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com