
உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டி: ஜி.கே. மணி
By DIN | Published on : 06th May 2017 11:15 AM | அ+அ அ- |
புதுக்கோட்டை: தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்தே போட்டியிடும் என்றார் அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி.
புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டியில் மேலும் கூறியது:
தமிழகத்தில் 140 ஆண்டுகளாக இல்லாத வறட்சியால் குடிநீர்ப் பிரச்னை, விவசாயிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசு வறட்சி நிவாரணத்தை முழுமையாக வழங்காத நிலையில், தமிழக அரசு இதில் மெத்தனமாக இருக்கிறது. தமிழகத்தை ஆளும் அரசு இரு பிரிவாக உள்ள தங்கள் கட்சியினரை ஒன்றிணைக்கும் முயற்சியிலேயே முழு கவனத்தைச் செலுத்தி வருகிறது. வறட்சியையும், குடிநீர்ப் பிரச்னையையும் தீர்க்க வறண்டு கிடக்கும் தமிழக அணைகளை உடனடியாகத் தூர்வார வேண்டும்.
தமிழகத்திலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் காலியாக உள்ள துணைவேந்தர் பதவிகளை தாமதமின்றி நிரப்ப வேண்டும். மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் செயலையே மத்திய அரசு தொடர்கிறது. குறிப்பாக கல்வியை மாநில அரசின் பட்டியலுக்குக் கொண்டுவர வேண்டும். தமிழக மாணவர்களைப் பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்யக் கூடாது.
எதிர்க்கட்சியான திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. ஆனால், அந்தக் கூட்டத்தை ஆளுங்கட்சி கூட்டியிருந்தால் மட்டுமே பலன் கிடைத்திருக்கும். உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தி முடிக்க வேண்டும். கொடநாடு கொலைச் சம்பவம், கொள்ளை தொடர்பாக போலீஸார் மேற்கொண்டுள்ள விசாரணையில் அரசியல் தலையீடு இல்லாமல் உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார் ஜி.கே. மணி.