பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, வைகை ஆற்றில் இறங்குவதற்காக தங்கக் குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு மதுரை வந்த
பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்

மதுரை: சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, வைகை ஆற்றில் இறங்குவதற்காக தங்கக் குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு மதுரை வந்த கள்ளழகர், பச்சை பட்டு உடுத்தி இன்று புதன்கிழமை காலை 6.30 மணி அளவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் 'கோவிந்தா' 'கோவிந்தா' கோஷம் முழங்க கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். அவரை வெள்ளிக் குதிரையில் எழுந்தருளிய வீரராகவப் பெருமாள் வரவேற்றார்.

வைகை ஆற்றில் இறங்கிய அழகரை லட்சக்கணக்கான பக்தர்கள் கைகளில் தீபம் ஏந்தி வரவேற்றனர்.

கள்ளழகரை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர். கள்ளழகர் ஆற்றில் நிகழ்ச்சியால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது. பாதுகாப்பு பணிக்காக மதுரை மாநகா் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள் பல்லக்கில் திங்கள்கிழமை மாலை புறப்பாடானார்.

பொய்கைக்கரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன்திருப்பதி, சுந்தரராஜன்பட்டி மறவர்மண்டபம், கடச்சனேந்தல் வழியாக செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணிக்கு மூன்றுமாவடி வந்த கள்ளழகரை அங்கு கூடியிருந்த பக்தர்கள் வரவேற்ற எதிர்சேவை நடைபெற்றது.

கண்டாங்கி உடை, வேல்கம்பு, வளரியுடன் வந்த அழகரை பக்தர்கள் சர்க்கரை நிரம்பிய செம்பில் சூடன் ஏற்றி வழிபட்டனர். நூபுர கங்கைத் தீர்த்த வண்டிகளும், உண்டியல் வண்டிகளும் மற்றும் அழகர் வர்ணனைப் பாடல் குழுவினரும் அழகருடன் வந்தனர்.

எதிர்சேவைக்குப் பின்னர் புதூர், ரிசர்வ்லைன், புதுநத்தம் சாலை ஆட்சியர் குடியிருப்பு வழியாக பகல் 1.45 மணிக்கு டீன் குடியிருப்புப் பகுதிக்கு கள்ளழகர் வந்தார். மாலையில் மதுரை அழகர்கோவில் சாலை அவுட்போஸ்ட் அம்பலகாரர் மண்டகப்படியில் எழுந்தருளினார். அங்கு மதுரை மக்கள் வாணவேடிக்கையுடன் அழகரை வரவேற்றனர்.

தல்லாகுளம் பகுதியில் உள்ள மண்டகப்படிகளில் எழுந்தருளிய கள்ளழகரை விடிய விடிய ஆயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்தனர். இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் அருள்மிகு பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் அழகர் எழுந்தருளினார். அங்கு திருமஞ்சனமாகி தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த திருமாலை அணிவிக்கப்பட்டது. நாட்டின் வளத்தை குறிக்கும் பட்டும் சார்த்தப்பட்டது.

நள்ளிரவில் திருக்கோயிலில் இருந்து புறப்பாடான கள்ளழகர் தல்லாகுளம் கருப்பணசாமி திருக்கோயில் அருகே அமைக்கப்பட்ட ஆயிரம்பொன் சப்பரத்தில் அருள்பாலித்தார்.

கிராமமக்கள் வாகனங்களில் வந்து தல்லாகுளம், கோரிப்பாளையம், மதிச்சியம் பகுதியில் தங்கியதால் அப்பகுதிகள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன. தண்ணீரை பீச்சி அடித்து அழகரை லட்சக்காணக்கான மக்கள் வரவேற்றனர்.

கோரிப்பாளையம், ஆழ்வார்புரம் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் வந்த கள்ளழகர் இன்று புதன்கிழமை காலை 6.15 மணியளவில் வைகை ஆற்றில் இறங்கினார். அவரை வீரராகவப் பெருமாள் எதிர்கொண்டு வரவேற்றார்.

மதுரை வைகை ஆற்றில் இன்று புதன்கிழமை காலை எழுந்தருளிய கள்ளழகர் ராமராயர் மண்டகப்படியில் பகல் 12 மணிக்கு எழுந்தருள்கிறார். அங்கு பக்தர்களின் அங்கப்பிரதட்சணம் மற்றும் நீர் பீய்ச்சும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. பின்னர் வைகை வடகரை வழியாக அண்ணாநகர் பகுதி திருக்கண் மண்டகப்படிகளில் எழுந்தருள்கிறார். அதன்பின் வண்டியூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் இன்று புதன்கிழமை இரவு எழுந்தருள்கிறார்.

நாளை வியாழக்கிழமை (மே 11) ஏகாந்தசேவையில் பத்தி உலாவரும் கள்ளழகர் திருமஞ்சனமாகி சேஷவாகனத்தில் வண்டியூர் வைகை ஆற்றின் நடுவில் உள்ள தேனூர் மண்டகப்படியில் எழுந்தருள்வார். அங்கு பகல் 11 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளிய பின்னர் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் அளிப்பார். அங்கிருந்து மீண்டும் வண்டியூர் அனுமார் கோயிலில் சுந்தரராஜப் பெருமான் எழுந்தருள்வார்.

அங்கு மாலை 3.30 மணிக்கு திருமஞ்சனமான பின்னர் அண்ணாநகர் வழியாக வந்து இரவில் மதிச்சியம் ராமராயர் மண்டகப்படியில் எழுந்தருள்வார். அங்கு விடிய விடிய தசாவதாரம் நடைபெறும்.

தசாவதாரம் நிறைவுற்றதும், வெள்ளிக்கிழமை அதிகாலை மோகினி அவதாரத்தில் பத்தி உலாவுதல் நடைபெறும். அங்கு திருமஞ்சனமாகி ஆனந்தராயர் பல்லக்கில் ராஜாங்க திருக்கோலத்தில் சுந்தரராஜப் பெருமாள் புறப்பாடாவார். வைகை ஆற்று திருக்கண் மண்டகப்படி, கோரிப்பாளையம் வழியாக தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன்புள்ள ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இரவில் எழுந்தருள்வார்.

வெள்ளிக்கிழமை இரவு மன்னர் சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கில் எழுந்தருளும் கள்ளழகர் கருப்பணசாமி திருக்கோயிலில் வையாழி ஆகி சனிக்கிழமை அதிகாலையில் அழகர்மலை நோக்கிப் புறப்பாடாவார்.

மூன்றுமாவடியில் வழியனுப்பு பூஜைகள் நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை இரவு அழகர் மலையைச் சென்றடைவார்.

அழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினால் அந்த வருடம் விவசாயம் செழிக்கும் என்பது ஐதீகம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com