தேர்ந்த குற்றவாளிகளை கண்காணிப்பதில் காவல்துறை பலவீனம்: ஆளுநர் கிரண்பேடி

தேர்ந்த குற்றவாளிகளை கண்காணிப்பதில் காவல்துறை பலவீனம்: ஆளுநர் கிரண்பேடி

தேர்ந்த குற்றவாளிகளை கண்காணிப்பதில் காவல்துறை செயல்பாடுகள் பலவீனமாக உள்ளது என ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுச்சேரி: தேர்ந்த குற்றவாளிகளை கண்காணிப்பதில் காவல்துறை செயல்பாடுகள் பலவீனமாக உள்ளது என ஆளுநர் கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுவையில் கடந்த 2 மாதங்களாக தொடர் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 பேருக்கு மேல் கொலை செய்யப்பட்டுள்ளனர். நாள்தோறும் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி சனிக்கிழமை முதலியார்பேட்டை காவல் நிலைத்தில் ஆய்வு செய்தார். அப்போது குற்றவாளிகள் தொடர்பான பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து குற்றச்செயல்களை தடுக்கவும், குண்டர்களை ஒடுக்குவது தொடர்பாகவும் கோரிமேடு காவலர் பயிற்சிப் பள்ளியில் ஆய்வுக் கூட்டம் சனிக்கிழமை மாலை நடந்தது.

ஆளுநர் கிரண்பேடி தலைமை தாங்கினார். டிஜிபி எஸ்கே.கௌதம், ஐஜி கண்ணன் ஜெகதீசன், ஆளுநர் தனிச் செயலர் ஸ்ரீதரன், சிறப்பு அதிகாரி அம்ருதா ஆகியோர் பங்கேற்றனர். முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் குற்றவாளிகள் பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படாமை குறித்து கிரண்பேடி எடுத்துக்கூறினார். இதுபோன்ற செயலால் தேர்ந்த குற்றவாளிகளை கண்காணிப்பதில் காவல்துறையின் செயல்பாடு பலவீனமாக உள்ளது.

காவல்துறை அதிகாரிகள் நாள்தோறும் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்த உத்தரவுகளை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்துள்ளார். அதன் விவரம்:

டிஜிபி, ஐஜி, எஸ்பிக்கள், நாள்தோறும் ஏதாவது ஒரு காவல் நிலையத்துக்கு சென்று சோதனையிட வேண்டும், ரோந்து காவல் அதிகாரிகளுடன் கலந்து பேசி தங்கள் அன்றாட பணிகளை தொடங்க வேண்டும். காவல் நிலைய பதிவேடுகளை முறையாக சோதனை செய்ய வேண்டும்.

இதன் மூலம் அதிகாரிகள், காவலர்கள் மத்தியில் முறையான தகவல் பரிமாற்றம் நடைபெறும். தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர் குறித்து தனி பதிவேடுகள் பராமரிக்க வேண்டும்.அவற்றில் அவர்கள் பற்றிய புதிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.

யாராவது தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார்களா என ரோந்து காவலர்கள் கண்காணிக்க வேண்டும். தலைமறைவு குற்றவாளிகள், தொடர் குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்களை ரத்து செய்ய நீதிமன்றங்களை கவனமாக அணுக வேண்டும். எதிரிகளுக்கு ஜாமீன் அளிப்போர் தொடர்பாக தனி ஆவணங்களை பராமரிக்க வேண்டும்.

எதிரிகள் செயல்களை கட்டுப்படுத்த அவர்களுக்கு ஜாமீன் அளிப்போரை காவல் நிலையத்துக்கு அழைத்து எச்சரிக்க வேண்டும். காவல்துறை கட்டுப்பாட்டு அறைகளில் பெறப்பட்ட புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் குறித்து தனி புத்தகம் வைக்கப்பட வேண்டும். குற்றங்களை தடுப்பதற்காக குண்டர் தடுப்புச் சட்டம் உள்பட அனைத்து வழிமுறைகளை கையாள வேண்டும்.

குற்றங்களை தடுத்தல், நுண்ணறிவு துறை செயல்பாடு பற்றி கோட்ட அளவில் அடிக்கடி ஆய்வுக் கூட்டங்களை நடத்த வேண்டும். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செயல்பாடு குறித்து 1 மாதத்தில் மீண்டும் ஆய்வு செய்யப்படும் என தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com