முதியவர் மீது கஞ்சா வழக்கு:  மீண்டும் விசாரிக்க மாநகர காவல் ஆணையருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

முதியவர் மீதான கஞ்சா வழக்கை நேர்மையான அதிகாரியை கொண்டு மீண்டும் விசாரிக்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: முதியவர் மீதான கஞ்சா வழக்கை நேர்மையான அதிகாரியை கொண்டு மீண்டும் விசாரிக்குமாறு மாநகர காவல் ஆணையருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர், மணலி சாலையில் உள்ள எழில் நகரைச் சேர்ந்தவர் வேதகண்(74). இவர் மீது கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி ஆர்.கே.நகர் போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்தனர். சுமார் 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை வேதகண் வீட்டிலுள்ள பீரோவில் வைத்திருந்ததாகக் கூறி, அவரை கைது செய்தனர்.

பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னையில் உள்ள போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் வேதகண் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், நாங்கள் குடியிருக்கும் எழில் நகர் பகுதி 250 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது.

இந்த இடத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக நான் உள்பட 4 ஆயிரம் குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எழில் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவராகவும் உள்ளேன். இந்த நிலத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு 4 ஆயிரம் குடும்பத்துக்கு தமிழக அரசு வழங்கியது. ஆனால், முறையாக உத்தரவை இது வரை பிறப்பிக்கவில்லை.

இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, சாதகமாக உத்தரவு வந்துள்ளது. இந்த நிலையில், உள்ளூர் எம்எல்ஏ. மற்றும் அவரது அடியாள்கள், இந்த 250 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சித்து வருகின்றனர். மேலும் எழில் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தையும் கைப்பற்றவும் எம்எல்ஏ.வின் ஆட்கள் முயற்சி வருகின்றனர். இதன் ஒரு முயற்சியாக, என் மீதும், சங்க நிர்வாகிகள் மீதும் கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்குப் பதிவு செய்து விடுவோம் என்றும் மிரட்டினர்.

மிரட்டல், பொய் வழக்கு போடுவதாகக்கூறியது குறித்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்தேன். இதையடுத்து, உள்ளூர் எம்எல்ஏ, அவரது ஆட்களின் தூண்டுதலின் பேரில்,  கஞ்சா வைத்திருந்ததாக பொய் வழக்கை போலீசார் பதிவு செய்தனர். எனவே, இந்த வழக்கில் எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.அய்யப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார். ஆனால், பதில் மனு தாக்கல் செய்ய பல முறை போலீசார் கால அவகாசம் கேட்டனர். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உள்ளூர் எம்.எல்.ஏ.வும், அவரது அடியாள்களும் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாகவும், அதனால் இந்த பொய் வழக்கை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மூன்று முறை விசாரணையை தள்ளி வைத்தும் போலீசார் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. எனவே, வழக்கின் தன்மை அறிந்து, மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்கிறேன். அதே நேரம், மனுதாரர் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டு தீவிரமானதாக உள்ளது.

எனவே, ஒரு  நேர்மையான அதிகாரியை நியமித்து, இந்த கஞ்சா வழக்கு மனுதாரர் மீது பொய்யாக தொடரப்பட்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என, சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் 75 வயது முதியவரான வேதகண்ணுக்கு அண்மையில் நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com