செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படுமா?

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது என்று தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.
செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படுமா?

புதுதில்லி: செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்காவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படாது என்று தொலைத்தொடர்புத் துறை அறிவித்துள்ளது.

செல்லிடப் பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்கக்கோரி, மத்திய தொலைத் தொடர்பு துறை கடந்த மார்ச் மாதம் 23-ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில், செல்லிடப் பேசி எண்ணுடன் ஆதாரை ஓராண்டுக்குள் கட்டாயமாக இணைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்திருந்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் செல்லிடப் பேசி எண்களுடன் ஆதாரை இணைக்கும் பணியில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தஹ்சீன் பூனாவாலா என்பவர் செல்லிடப் பேசி எண்ணுடன் ஆதாரை இணைக்கக்கோரி, மத்திய தொலைத் தொடர்பு துறை வெளியிட்ட அறிவிக்கையை அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது, செல்லாது என்று அறிவித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் முன்பு திங்கள்கிழமை பரிசீலிக்கப்பட்டது.  அப்போது மனுதாரர் சார்பில் ஆஜராக வேண்டிய மூத்த வழக்குரைஞர் கே.டி.எஸ். துளசி உச்ச நீதிமன்றத்துக்கு வரவில்லை. இதுகுறித்து நீதிபதிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், மனு மீதான விசாரணை வரும் 13-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்தனர். 

அரசுத் திட்டங்களின் சலுகைகளைப் பெற ஆதாரை இணைக்க விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பு தெரிவித்தது. செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைக்க டிசம்பர் 6-ஆம் தேதி கடைசி நாளாகும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தொலைத்தொடர்புத் துறை செயலாளர் அருணா சுந்தரராஜன் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது, செல்லிடப் பேசி எண்களுடன் ஆதார் இணைப்பது குறித்து உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றார்.

செல்லிடப்பேசி இணைப்பை அளிப்பதை தவிர துண்டிப்பது அரசின் நோக்கம் அல்ல என்றும் எதையும் துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்று கூறினார். 

"வெளிநாட்டில் உள்ளவர்களுக்கான செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைப்புக்கான மாற்று வழிகளுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்துள்ளார். 
  
சேவையை தொடர்ந்து பெற உங்களின் செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் இணைத்துவிடுங்கள் என்று கூறி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 1-ஆம் தேதி முதல், செல்லிடப்பேசி சில்லறை விற்பனையாளர்களைப் பார்க்காமல் ஒரு கடவுச்சொல் (OTP) மூலம் செல்லிடப்பேசி சந்தாதாரர்கள் தங்கள் எண்ணிக்கையை மீண்டும் சரிபார்க்க முடியும் என்று யுஐடிஏஐ ஏற்கனவே கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com