சோனியாவுக்கு நீதிபதி தாமஸ் எழுதிய கடிதத்தில் சுட்டிகாட்டியிருக்கும் தகவல்கள் என்ன தெரியுமா..?

கடிதத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றச்சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால்
சோனியாவுக்கு நீதிபதி தாமஸ் எழுதிய கடிதத்தில் சுட்டிகாட்டியிருக்கும் தகவல்கள் என்ன தெரியுமா..?

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ளவர்களை கருணை அடிப்படையில் விடுவிக்க காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவரை வலியுறுத்த வேண்டும் என அந்த வழக்கில் கொலை வழக்கில் தண்டனை தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரான ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் சேனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த 1991-ஆம் ஆண்டு சென்னையை ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டார். 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், அவரது மனைவி நளினி உட்பட 7 பேரும் கடந்த 91-ஆம் ஆண்டு முதல் சிறையில் உள்ளனர். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

கடந்த 1999-ஆம் ஆண்டு ராஜிவ் கொலை வழக்கில் நீதிபதிகள் கே.டி.தாமஸ், வாத்வா, சையத்ஷா முகமது குவாத்ரி ஆகிய 3 பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. அதில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி ஆகியோருக்கு மரண தண்டனையும் மற்ற மூன்று பேருக்கு ஆயுள் தண்டைனையும் வழங்கப்பட்டது. பின்னர் அனைவரது தண்டனையும் ஆயுள் தண்டைனையாக குறைக்கப்பட்டது. 

இந்த தீர்ப்பில் நளினிக்கு நீதிபதி தாமஸ் மட்டும் ஆயுள் தண்டனை விதித்தார். ஆனால் பிற இரு நீதிபதிகளும் அதற்கு எதிராக தீர்ப்பு அளித்தனர். இருப்பினும், 2000-ஆம் ஆண்டில் நளினியின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 

இதைய.டுத்து கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், அதற்கு அப்போதைய மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 

இந்நிலையில், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் கருணை அடிப்படையில் மன்னிப்பு அளிக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்திக்கு, தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளில் ஒருவரும் ஒய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியுமான கே.டி.தாமஸ் கடிதம் எழுதியுள்ளார். 

கடந்த அக்டோபர் மாதம் 18-ஆம் தேதி சேனியாவுக்கு கே.டி.தாமஸ் எழுதிய கடிதத்தில் கூறியருப்பதாவது: 

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் நீங்களும் (சோனியா காந்தி), ராகுல் காந்தியும் (முடிந்தால் பிரியங்கா காந்தியும்) மன்னிப்பு அளிக்கவேண்டும். இது தொடர்பாக இசைவு தெரிவித்து குடியரசுத் தலைவருக்கு நீங்கள் கடிதம் அனுப்பினால், அதை அநேகமாக மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. நீங்கள் மட்டுமே காட்டுகிற மனித நேயமாக இந்த உதவி அமையும் என்று தோன்றுகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த நீதிபதி என்ற அடிப்படையில் அவர்களுக்கு கருணை காட்டுவீர்கள் என இந்த கடிதம் மூலம் நான் இந்த கோரிக்கையை உங்கள் முன் வைத்துள்ளேன். சிறையில் உள்ளவர்கள் தங்களது தவறுக்கான தண்டனையை அனுபவித்து விட்டனர். எனவே நீங்கள், இந்த சூழ்நிலையில் அவர்களுக்கு கருணை காட்ட வேண்டும். இந்த கைதிகளுக்கு கருணை காட்டுவதின் மூலம்தான் சர்வ வல்லமை படைத்த கடவுளும் மகிழ்ச்சி அடைவார் என்று தெரிவித்துள்ளார். 

உங்களுக்கு இந்த வேண்டுகோளை நான் விடுப்பதின்மூலம் நான் தவறு செய்திருந்தால், என்னை மன்னிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் இந்த வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ பல்வேறு தவறுகளை செய்துள்ளது. குறிப்பாக கைது செய்யப்பட்டு தண்டனை பெற்று வருபவர்களிடமிருந்து கைப்பற்ற ரூ.40 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது குறித்த தகவல்களை சிபிஐ தெரிவிக்கவில்லை. ஆனால் அது உண்மையல்ல எனவும். அதனால், இந்த விசாரணை இந்திய குற்றவியல் நீதி அமைப்பில் மன்னிக்க முடியாத குறை எனவும் தெரிவித்துள்ளார். 

இந்திய சாட்சிய சட்டத்தின்படி ஒப்புதல் வாக்குமூலத்தை ஆதாரமாக மட்டுமே கொள்ளமுடியும் என தனது வாதத்தை எடுத்து வைத்தேன். ஆனால், என்னுடன் இருந்த மற்ற இரு நீதிபதிகள் ஒப்புதல் வாக்குமூலத்தை நிலையான ஆதாரமாக கொள்ள வேண்டும் என வாதித்தனர். அதனால் இருவரிடமும் நான் என் வீட்டில் நீண்ட விவாதத்தை நடத்தினேன். ஆனால், அவர்களுடைய கருத்து பெரும்பான்மையாக இருந்ததால் அவர்கள் வழியிலேயே செல்ல நேர்ந்தது என தெரிவித்துள்ளார்.

முக்கிய குற்றவாளிகள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள். அந்த சமயத்தில் அரசு வழக்குரைஞராக இருந்த அல்டஃப் அஹமதுவிடம் கைப்பற்றப்பட்ட ரூ.40 லட்சம் குறித்து கேள்வி எழுப்பினேன். அந்த பணத்தின் மூலம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என கேட்டேன். பெரும் கலந்துரையாடலுக்கு பின், அப்போதைய சிபிஐ விசாரணை அதிகாரி டி.ஆர்.கார்த்திகேயன், இதுகுறித்து விளக்கமளிக்க கால அவகாசம் கேட்டார். அதற்கடுத்த நாளே நடந்த விசாரணையில் அந்த பணத்தின் மூலம் குறித்து கண்டுபிடிக்கவில்லை என அஹமது கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

விசாரணையில் இதுபோன்ற குறைபாடுகளால் நான் உளைச்சலுத்து ஆளானேன். இதுகுறித்து மற்ற நீதிபதிகளிடமும் கலந்தாலோசித்தேன். அவர்கள் சிபிஐயின் உழைப்பை கருத்தில்கொண்டு இறுதி உத்தரவில் சிபிஐயை விமர்சனம் செய்யக்கூடாது என தெரிவித்தனர். அதற்கு நான் சிபிஐயை இறுதி உத்தரவில் விமர்சனம் செய்யவோ, பாராட்டவோ கூடாது என்ற நிபந்தனையை தெரிவித்தேன். அதனை அவர்கள் ஒப்புக்கொண்டனர். 

ஆனால், தீர்ப்பு வழங்கியபோது, நீதிபதி டி.பி.வாத்வா, சிபிஐ அதிகாரி கார்த்திகேயனை மனதார பாராட்டியது எனக்கு அதிரிச்சியை அளித்தது. அது தலைப்பு செய்தியானது. அதாவது, சிபிஐ விசாரணையில் உச்சநீதிமன்றம் மகிழ்ச்சி அடைந்ததாக அந்த செய்திகள் அர்த்தம் கற்பித்தன எனவும் தாமஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் மூத்த நீதிபதியாக இருந்ததால், எனக்கு பிறகே டி.பி.வாத்வா தனது தீர்ப்பை வாசித்தார். அவர் கூறுவது எனக்கு முன்பே தெரிந்திருந்தால், என்னுடைய தரப்பு தீர்ப்பை நான் எனக்கேற்ப மாற்றி எழுதியிருப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 19 பேரில் ஒருவர் வாரப்பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டி குறித்து தெரிவித்த தாமஸ், அவர் அந்தி பத்திரிக்கையில் ரூ.40 லட்சத்தை தந்தது சந்திரசுவாமிதான் என தெரிவித்துள்ளார். ஆனால், அதுபற்றி ஏதும் பேசக்கூடாது என அதிகாரி ஒருவர் எச்சரித்திருக்கிறார். இந்த வழக்கில் சந்திரசுவாமியின் தாக்கம் குறித்து விசாரிக்கப்படாதது இந்திய குற்றவியல் அமைப்பின் தோல்வி என நான் தீர்க்கமாக நம்புகிறேன். இது இந்திய குற்றவியல் நீதி அமைப்பின் மன்னிக்க முடியாது குறை என தெரிவித்துள்ளார். கடந்த மே மாதம் 23-ஆம் தேதி இறந்துவிட்டார். 

கடந்த 2013-ஆம் ஆண்டு இந்த வழக்கில் இரட்டை தண்டைனை வழங்கப்பட்டுள்ளது குறித்தும், ஏற்கனவே 24 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை தூக்கில் போடுவது குறித்தும் கே.டி.தாமஸ் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
 
மேலும் கடிதத்தில் தேசப்பிதா மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றச்சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் நாதுராம் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சேயை, 14 ஆண்டுகள் சிறைவாசம் முடிந்த நிலையில் விடுதலை செய்வதற்கு 1964-ஆம் ஆண்டில் அப்போதைய மத்திய அரசு முடிவு எடுத்ததையும் முன்னாள் நீதிபதி தாமஸ் சுட்டிக்காட்டி உள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com