ஜெயலலிதா வாழ்ந்த கோயிலுக்கு துன்பம் வந்துள்ளது: விவேக் அதிரடி பேட்டி

ஜெயலலிதா வாழ்ந்த கோவிலுக்கு துன்பம் வந்துள்ளது. இங்கு சோதனை நடத்தியது கவலையளிக்கிறது என ஜெயா தொலைக்காட்சி
ஜெயலலிதா வாழ்ந்த கோயிலுக்கு துன்பம் வந்துள்ளது: விவேக் அதிரடி பேட்டி

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த கோவிலுக்கு துன்பம் வந்துள்ளது. இங்கு சோதனை நடத்தியது கவலையளிக்கிறது என ஜெயா தொலைக்காட்சி தலைமை நிர்வாகி விவேக் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித் துறையினர் வெள்ளிக்கிழமை இரவு சோதனை நடத்தினர். நள்ளிரவை நீடித்த சோதனை நிறைவு பெற்றுள்ளது. 

போலி நிறுவனங்களை நடத்தியது, அந்த நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது, வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 9-ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர்.

தொடர்ந்து ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்தச் சோதனை கடந்த திங்கள்கிழமை (நவ.13) முடிவுக்கு வந்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வுப் பணி நிறைவுபெற ஒரு மாதத்தைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. மேலும் வருமான வரித் துறையினர் முதல் கட்டமாக நடத்திய ஆய்வில், ரூ.1,430 கோடிக்கான ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதே வேளையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சோதனை நடைபெற்றவர்களிடம் வருமான வரித் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் சோதனை நடத்துவதற்காக வருமான வரித்துறையைச் சேர்ந்த 4 அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் சென்றனர். 

இதையடுத்து, ஜெயா தொலைக்காட்சி தலைமை நிர்வாகி விவேக் போயஸ் கார்டன் வேதா இல்லத்துக்கு விரைந்து வந்தார். அதிமுக தொண்டர்களும் அங்கு வந்து குவிந்தனர். 

நேற்று வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய வருமான வரித்துறை சோதனை இன்று அதிகாலை நிறைவடைந்தது. 

வருமான வரித்துறையினரின் சோதனைக்கு பிறகு விவேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்ல கோயிலுக்கு துன்பம் வந்துள்ளது. இங்கு நடத்தப்பட்ட சோதனை வேதனை அளிக்கிறது என தெரிவித்தார். 

வேதா இல்லத்தில் ஜெயலலிதாவின் அறையை சோதனையிட நாங்கள் அனுமதிக்கவில்லை என்றும் மற்ற அறைகளில் சோதனை நடைபெற்றதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வாரண்ட் பெற்று சோதனை நடத்தப்பட்டதாக விவேக் தெரிவித்தார்.

சோதனையின் முடிவில் 2 பென் டிரைவ்கள், ஒரு லேப்டாப் மற்றும் ஜெயலலிதாவுக்கு வந்த கடிதங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். 

மேலும், எனது சகோதரி ஷகீலாவை அதிகாரிகள் அழைத்து வந்துள்ளனர். ஜெயலலிதா வாழ்ந்த இடத்துக்கு வந்த துன்பத்தை யாரும் தட்டிக் கேட்கவில்லை. என்று தெரிவித்தார். 

இந்தத் திடீர் சோதனையின் காரணமாக தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் தலைமையில் போலீஸார் போயஸ் கார்டன் முழுவதும் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com