வேதா இல்லத்தில் சோதனை: மதுரை மீனாட்சி அம்மனிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுதல்! 

போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் அதிமுக தொண்டர்கள் கொதிப்படைந்துள்ள நிலையில்
வேதா இல்லத்தில் சோதனை: மதுரை மீனாட்சி அம்மனிடம் முதல்வர் பழனிசாமி வேண்டுதல்! 

மதுரை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் அதிமுக தொண்டர்கள் கொதிப்படைந்துள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். 

போலி நிறுவனங்களை நடத்தியது, அந்த நிறுவனங்கள் மூலம் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது, வரி ஏய்ப்பில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில் அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலாவின் உறவினர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் கடந்த 9-ஆம் தேதி சோதனையைத் தொடங்கினர்.

தொடர்ந்து ஐந்து நாள்கள் நடைபெற்ற இந்தச் சோதனை கடந்த திங்கள்கிழமை (நவ.13) முடிவுக்கு வந்தது. சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆய்வுப் பணி நிறைவுபெற ஒரு மாதத்தைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. மேலும் வருமான வரித் துறையினர் முதல் கட்டமாக நடத்திய ஆய்வில், ரூ.1,430 கோடிக்கான ஆவணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதே வேளையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக சோதனை நடைபெற்றவர்களிடம் வருமான வரித் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். 

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் சோதனை நடத்துவதற்காக வருமான வரித்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் தொடங்கிய அதிரடி சோதனை இன்று அதிகாலை முடிவடைந்தது. இந்த சோதனை ஜெயலலிதா அறையை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சோதனைகள் நடைபெற்றன. 

இந்த தகவல் வெளியானது முதல் கொந்தளித்த அதிமுக தொண்டர்கள் போயஸ் தோட்டத்தில் குவியத் தொடங்கினர். திடீரென இரவு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

ஜெயலலிதா வாழந்த வேதா இல்லத்தில் நடந்த சோதனை வேதனையானது என தொண்டர்கள் கொதிப்படைந்துள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். 

அதிமுக அரசு மத்திய அரசின் கட்டளையை ஏற்று செயல்படுவதாக கூறிவரும் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தும் வகையில் வருமான வரித் துறையினர் சோதனையை அடுத்து போயஸ் தோட்ட இல்லத்தில் போலீஸாரை மட்டும் குவித்துள்ளது அரசு. 

ஆனால் வருமான வரி சோதனை நடந்தபோது மூத்த அமைச்சர்கள் யாரும் அந்தப் பக்கம் வருகை தரவில்லை என்பது உறுதிப்படுத்தியுள்ளது. இந்த செயல் தொண்டர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. 

சசிகலா குடும்பத்தினரை சுற்றி வளைத்து நடத்திய வருமான வரி சோதனையால் மத்திய அரசு மீது ஆத்திரப்படாத அதிமுக தொண்டர்கள், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தில் சோதனை நடத்தியதன் மூலம் தொண்டர்களின் எதிர்ப்பலையை சம்பாதித்துள்ளது. 

ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், வேதா நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடந்தியபோது அந்த பக்கம் ஜெயலலிதாவை தெய்வமாக வழிபடும் மூத்த அமைச்சர்களோ, முக்கிய தலைவர்கள் யாரும் வரவில்லை ஏன் என்று கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

சோதனை குறித்து முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வமோ அல்லது தேவையில்லாத விவகாரங்களுக்கெல்லாம் முந்திக்கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் அமைச்சர்கள் யாருமே இது வரை வாய் திறக்கவேயில்லை ஏன் என்ற கேள்வி எழுப்பி உள்ளனர்.  

இந்நிலையில், இன்று அதிகாலை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்துள்ளார் முதல்வர் பழனிசாமி. முதல்வருடன் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ஆர்.பி. உதயகுமார், செல்லூர் ராஜு உள்ளிட்டோரும் சென்றுள்ளனர். 

கோயிலுக்கு வருகை சந்த முதல்வர் பழனிசாமி மற்றும் அமைச்சர்களுக்கு கோவில் நிர்வாகத்தினர் மரியாதை செலுத்தி வரவேற்பு அளித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com