புனே அருகே ராட்சத கிரேன் அறுந்து விழுந்து 8 தொழிலாளர்கள் பலி

நீரா மற்றும் பீமா நதிகளை இணைக்கும் திட்ட பணியின் போது ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே

புனே: நீரா மற்றும் பீமா நதிகளை இணைக்கும் திட்ட பணியின் போது ராட்சத கிரேன் அறுந்து விழுந்ததில் 7 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவருவர் மருத்துவனையில் உயிரிழந்துள்ளார்.

மஹராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து 120 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தாப்பூர் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் நீரா மற்றும் பீமா நதிகளை இணைக்கும் திட்டம் அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

கிருஷ்ணா பீமா உறுதிப்படுத்தல் திட்டத்தின் கீழ் 24.8 கி.மீ நீளமுள்ள நீரா-பீமா இணைப்பு 5 சுரங்கப்பாதையை அமைப்பதற்காக இந்தாப்பூர் அடுத்த அகேலே கிராம பகுதியில் 100 அடிக்கு மேல் பூமிக்கடியில் சுரங்கம் தோண்டி ராட்சத குழாய்கள் பதிக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்கான பணிகளில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செய்து வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். நேற்று மாலை 6.30 மணியளவில் வழக்கம் போல பணிகள் முடிந்தன. இதையடுத்து சுரங்கப்பாதையிலிருந்து தொழிலாளர்கள் வெளியே வந்து கொண்டிருந்தனர். கட்டுமான பணிக்காக தளவாட பொருட்களை தூக்கிக்கொண்டு வருவதற்காக 250 அடி உயரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேனை தாங்கி பிடிக்கும் இரும்பு கம்பி திடீரென அறுந்தால் விழுந்தது. 

கண் இமைக்கும் நேரத்தில் நிகழந்த இந்த கோர விபத்தில் பணி முடிந்து வந்துகொண்டிருந்த தொழிலாளர்கள் கிரேனுக்கு அடியில் சிக்கி தொழிலாளர்கள் உடல் நசுங்கினார்கள். மேலும் சிலர் படுகாயம் அடைந்தனர்.

அதிரிச்சி அடைந்த மற்ற தொழிலாளர்கள், அறுந்து விழுந்த கிரேனை சுற்றி அலறியபடி அங்கும், இங்குமாக ஓடினார்கள். விபத்து பற்றி போலீஸ் மற்றும் மீட்பு படையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 

விரைந்து வந்த மீட்பு குழுவினர் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்சுகள் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலியானவர்களின் உடல்களை மீட்கும் நடவடிக்கையும் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அப்போது கிரேனுக்கு அடியில் இருந்து 7 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். அவர்களில் சிலரது உடல்கள் சிதைந்து போய் இருந்தன.

போலீஸார் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்தது.

உயிரிழந்தவர்களின் உடல் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கிரேன் அறுந்து விழுந்து 8 பேர் பலியான துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக பிக்வன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நதி-இணைப்பு திட்டம். 2012-இல் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. நீர் நிறைந்த நதிகளில் இருந்து வறட்சியான பகுதிகளுக்கு தண்ணீர் எடுத்து வரும் வகையில் இந்த பணிகள் வடிவமைக்கப்பட்டு நடந்து வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com