ஒரு சார்பு செயல்பாடுகளால் தேர்தல் ஆணையம் நம்பிக்கை இழந்து விட்டது: ராமதாஸ்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முடக்கி வைக்கப்பட்டிருந்த இரட்டை இலைச் சின்னமும், கட்சியின் பெயர் மற்றும் கொடியும் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு  வழங்கப்பட்டிருக்கின்றன.
ஒரு சார்பு செயல்பாடுகளால் தேர்தல் ஆணையம் நம்பிக்கை இழந்து விட்டது: ராமதாஸ்

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முடக்கி வைக்கப்பட்டிருந்த இரட்டை இலைச் சின்னமும், கட்சியின் பெயர் மற்றும் கொடியும் ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணிக்கு  வழங்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு பின்னால் பல்வேறு காரணங்கள்  இருப்பதாகவும், மத்திய அரசின் தலையீட்டால் தான் சின்னம் கிடைத்ததாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.

இந்த சர்ச்சைகள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், அதிமுகவின் இரு அணிகளும் தமிழக அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டிய சக்திகள் தான். இப்போதும் அது தான் நடைபெறப்போகிறது. இரட்டை இலை சின்னம் கிடைக்காத அணி இன்னும் சில மாதங்களில் அரசியல் அரங்கில் முக்கியத்துவம் இழக்கும். இரட்டை இலை சின்னம் கிடைக்கப்பெற்றுள்ள அணி அதிகாரத்தின் கடைசி சொட்டு வரை அனுபவித்து விட்டு, அதன்பின் முக்கியத்துவத்தை இழக்கும்.

ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் என்பது அப்படிப்பட்டதல்ல. இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியாவில் தேர்தல்களை அந்த அமைப்பு தான் நடத்த வேண்டும். தேர்தல் ஆணையம் அதிகபட்ச நம்பகத்தன்மை மற்றும் வெளிடைத்தன்மையுடன் நடந்து கொண்டால் தான் இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்படும். அதற்காகவாவது ஆணையத்தின் செயல்பாடுகள் ஐயத்திற்கிடமின்றி அமைய வேண்டும்.

அதற்கு மாறாக, தேர்தல் ஆணையத்தின் அடுத்தடுத்த முடிவுகள் அதன் மீதான நம்பகத் தன்மையை இதுவரை இல்லாத அளவில் சிதைத்திருக்கின்றன. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக இரு அணிகளாக உடைந்ததால் அக்கட்சியின் சின்னமும், கொடியும் யாருக்கு? என்ற வினா எழுந்தது. அந்த வினாவுக்கு நியாயமான கால அவகாசத்தில் விடை காண நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம், இப்போது சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக இரட்டை இலை சின்னம் குறித்த விசாரணையை அவசர, அவசரமாக நடத்தி முடிவை அறிவித்திருக்கிறது.  இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்த தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வத் தீர்ப்பு  வெளியாவதற்கு முன்பே இரட்டை இலைச் சின்னம் தங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சி தெரிவிக்கிறார். பின்னர் இது சர்ச்சையானவுடன் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையிலேயே இவ்வாறு கூறியதாகக் கூறி பிரச்சினையை திசை திருப்புகிறார்.

அடுத்ததாக, இரட்டை இலை சின்னம் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதுபற்றியும் ஆளுங்கட்சிக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்து, தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாகவே அவசர, அவசரமாக அரசு விழாக்கள் நடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றன. தமிழக ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தான் தேர்தல் ஆணையம் நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாற்றை மெய்ப்பிக்கும் வகையில் தான் இந்த நிகழ்வுகள் நடக்கின்றன. இது தேர்தல் ஆணையத்திற்கு பெருமை சேர்க்காது.

இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டதால் தான் அவசர, அவசரமாகத் தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டியிருந்ததாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அளிக்கப்படும் விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தேர்தல் ஆணையம் நினைத்திருந்தால், அங்கு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்துவதற்குரிய சூழலை ஏற்படுத்திய பிறகே தேர்தல் நடத்த முடியும் என்பதை உயர்நீதிமன்றத்தில்  தெரிவித்து கூடுதல் அவகாசம் பெற்றிருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் மீது விழுந்த கரும்புள்ளியாக மாறிவிட்டது. இது கண்டிக்கத்தக்கதாகும்.

இப்போதுள்ள சூழலில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலை ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட பணம் வழங்கப்படாமல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதன் மூலம் தான் இழந்த பெருமையை ஓரளவாவது தேர்தல் ஆணையம் மீட்க முடியும். எனவே, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலை எந்த வித முறைகேடுமின்றி நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com