தமிழக மீனவர்கள் மீது 2வது நாளாக இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல்!

நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து 10 படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீது 2வது நாளாக இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல்!

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு அப்பால் கடலில் 10 படகுகளில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் 2வது நாளாக தாக்குதல் நடத்தியதுடன், அவர்கள் வைத்திருந்த வலைகளை அறுத்தெறிந்தும், ஜிபிஎஸ் கருவிகளை பறித்துக்கொண்டு விரட்டியடித்துள்ளனர். 

கோடியக்கரைக்கு அப்பால் கடல் பரப்பில் மீன்பிடிக்கும் தமிழகம் மற்றும் காரைக்கால் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது அல்லது உடைமைகளை அபகரித்துக்கொண்டு விரட்டியடிப்பது போன்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக அவ்வப்போது தொடர்ந்து வருகிறது. 

இந்த சம்பவங்களில் சீருடையில் வரும் இலங்கைக் கடற்படையினர் தவிர, அந்நாட்டு மீனவர்கள் அல்லது அடையாளம் தெரியாத மர்ம நபர்களும் தாக்குதலில் ஈடுபடுவதாக பாதிப்புக்குள்ளாகும் தமிழக மீனர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்நிலையில், கோடியக்கரை படகுத்துறையில் தாற்காலிகமாக தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். வியாழக்கிழமை பகல் பாலுவுக்குச் சொந்தமான படகில் கடலுக்குச் சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே அன்றிரவு 8 மணிக்கு கடல் பரப்பில் வலை விரித்து மீன்பிடித்தனராம். அப்போது ஒரு விரைவு படகில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் வைத்திருந்த கயிறு 10 கிலோ, சமிக்ஞை விளக்கு, நண்டு 5 கிலோ, மீன் 5 கிலோ ஆகியவற்றை அபகரித்துக்கொண்டு, மீனவர்களைத் தாக்கி விரட்டினராம்.

இதையடுத்து, நேற்று வெள்ளிக்கிழமை காலையில் கரைக்குத் திரும்பிய மீனவர்களிடம் உளவுத்துறை போலீஸார் உள்ளிட்டோர் விசாரித்தனர். இதேபோல், கடந்த புதன்கிழமை இரவு நாகை மீனவர்கள் மூவர், மர்ம நபர்களால் வலைகள் அபகரிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இரவும் காரைக்கால், நாகை மீனவர்கள் மூவர் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டிருப்பது மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இன்று சனிக்கிழமை 10 படகுகளில் கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்தெறிந்தும், ஜிபிஎஸ் கருவிகளை பறித்தும் அட்டகாசம் செய்துள்ளனர்.

இரண்டாவது நாளாக தமிழக மீனவர்களை விரட்டியடித்து இலங்கை கடற்படை அட்டூழியம் செய்துள்ளனர். 

கடந்த ஐந்து நாள்களில் 3வது முறையாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மீனவர்கள் மீதான தாக்குதல், விரட்டியடிப்பு சம்பவங்கள் அண்மைக்காலமாக அவ்வப்போது நடைபெற்று வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

அதேநேரத்தில், சம்பவங்கள் குறித்து காவல்துறை, மீன்வளத்துறையினரிடம் மீனவர்கள் தரப்பில் முறையான புகார் ஏதும் அளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com