சசிகலாவிற்கு 5 நாட்கள் பரோல் வழங்கியது கர்நாடக சிறைத்துறை

சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச் செயலாளர்
சசிகலாவிற்கு 5 நாட்கள் பரோல் வழங்கியது கர்நாடக சிறைத்துறை

பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனையை அனுபவித்து வரும் அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு இன்று 5 நாட்கள் பரோல் வழங்கி உள்ளது கர்நாடக சிறைத்துறை.

சொத்து குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து அ.தி.மு.க.(அம்மா) அணி பொதுச் செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சசிகலாவின் கணவர் நடராஜன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதற்கிடையே தனது கணவரை பார்ப்பதற்காக 15 நாட்கள் ‘பரோல்’ வழங்குமாறு கேட்டு சசிகலா சார்பில் சிறை அதிகாரிகளிடம் கடந்த 3-ஆம் தேதி மனு கொடுக்கப்பட்டது.

அந்த மனுவில் சில குறைபாடுகள் இருப்பதாகவும், அதை சரிசெய்து மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்யும்படியும் கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து சிறை அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து சசிகலாவின் வழக்குரைஞர்கள் நேற்று முன்தினம் அனைத்து தகவல்களையும் உள்ளடக்கி மீண்டும் புதிய பரோல் மனுவை சிறை அதிகாரிகளிடம் வழங்கினர். அந்த மனு சரியாக இருப்பதால் அதை ஏற்றுக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அத்துடன் சசிகலாவின் பாதுகாப்பு பிரச்சினை தொடர்பாக சென்னை போலீஸாரிடம் கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் கருத்து கேட்டு இருந்தனர். 

பரோல் தொடர்பாக மின்னஞ்சல் வழியாக தமிழக காவல்துறை கர்நாடகா காவல்துறைக்கு பதில் கடிதம் அனுப்பியது.

இதனையடுத்து சசிகலாவுக்கு பரோல் தர சென்னை போலீஸார் விதித்த நிபந்தனைகள் குறித்து சிறைத்துறை நிர்வாகிகள் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். 

பரோல் தொடர்பாக உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம் சிறை வளாகத்தில் தொடர்ந்து நடைபெற்றது. விசாரணையை அடுத்து சசிகலாவுக்கு கர்நாடக பரப்பன அக்ரஹார சிறைத்துறை நிர்வாகம் 5 நாள் பரோல் வழங்கியது. 

15 நாட்கள் சசிகலா தரப்பில் பரோல் கேட்டிருந்த நிலையில் 5 நாட்கள் வழங்கப்பட்டு உள்ளது. பரோல் கிடைத்துள்ளதால் சிறிது நேரத்தில் சிறையில் இருந்து சென்னை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com