மாணவி அனிதா மரணம் குறித்த கருத்துக்கு எதிர்ப்பு: கோவையில் கிருஷ்ணசாமியின் உருவப்படம் எரிப்பு

மாணவி அனிதா மரணத்தை புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி இழிவுபடுத்தி பேசியதாக கூறி, கோவையில் அவரது உருவப் படத்தை எரித்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா, மருத்துவப் படிப்புக்கு இடம் கிடைக்காததால் மனமுடைந்து கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.  அனிதாவின் மரணத்துக்கு மத்திய,  மாநில அரசுகளே காரணம் என்று குற்றம் சாட்டி பல்வேறு அமைப்புகள்,  கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, மாணவி அனிதா நீட் தேர்வால் மருத்துவப்படிப்பில் இடம் கிடைக்கவில்லை என்பதற்காக தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் அவருடைய மரணத்திற்கான காரணங்கள் விசாரணைக்கு பிறகே வெளிவரும் எனவும் தெரிவித்து இருந்தார்.

மேலும், மருத்துவப் படிப்பு படிக்க இடம் கிடைக்கவில்லை என்றால் விவசாயம், பொறியியல், கலை, அறிவியல் போன்ற பல்வேறு படிப்புகள் படிக்கலாம் எனவும் எல்லாரும் மருத்துவம் படிப்பது அவசியம் இல்லை எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.  

கிருஷ்ணசாமியின் இந்த கருத்துக்களைக் கண்டித்து, கோவை காந்திபுரம் பகுதியில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கிருஷ்ணசாமியின் உருவப் படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 8 பேரை காட்டூர் போலீஸார் கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com