மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய போலீஸ் பாதுகாப்பு: நித்யானந்தா மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை ஆதீன மடத்துக்குள் சென்று பூஜைகள் செய்வதற்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் நித்யானந்தா மனுவை பரிசீலிக்க விளக்குத்தூண் போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஆதீன மடத்துக்குள் நுழைய போலீஸ் பாதுகாப்பு: நித்யானந்தா மனுவை பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை ஆதீன மடத்துக்குள் சென்று பூஜைகள் செய்வதற்கு பாதுகாப்பு வழங்கக் கோரும் நித்யானந்தா மனுவை பரிசீலிக்க விளக்குத்தூண் போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பிடதி நித்யானந்தா ஆசிரம நிறுவனர் நித்யானந்தா, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், 2500 ஆண்டு பழமையான மதுரை ஆதீன மடத்தின் 293-ஆவது ஆதீனமாக 292-வது ஆதீனம் அருணகிரிநாதரால் 2012-இல் நியமிக்கப்பட்டேன். இதைத்தொடர்ந்து மடத்தில் ஆன்மிகப் பணிகளை செய்து வந்தேன்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள், பொதுமக்களுக்கு எனது சொந்த செலவில் அன்னதானம் வழங்கும் திட்டத்தைத் தொடங்கினேன். இந்நிலையில் மடத்தின் சொத்துக்களை அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படும் சிலர் மடத்துக்கு எதிராக பிரச்னைகளை ஏற்படுத்தினர். பின்னர் மடத்தின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கக்கோரி மதுரை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், என்னை 293-ஆவது ஆதீனமாக நியமனம் செய்ததை ரத்து செய்து விட்டதாக அருணகிரிநாதர் அறிவித்தார். என்னை நீக்குவதற்கு அருணகிரிநாதருக்கு எந்த அதிகாரமும் இல்லை. மேலும் திருநாவுக்கரசு என்பவரை அடுத்த ஆதீனமாக நியமனம் செய்ததும் செல்லாது. இந்நிலையில் மதுரை ஆதீன மடத்துக்குள் சென்று என் கடமைகளை செய்வதற்கு சிலர் இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் 293-ஆவது ஆதீனம் என்ற முறையில் மதுரை ஆதீன மடத்துக்குள் சென்று பூஜைகள் செய்வதற்கு உரிய காவல்துறை பாதுகாப்பு வழங்க விளக்குத்தூண் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பாக வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி, நித்யானந்தா தரப்பில் இருந்து எந்த மனுவும் வரவில்லை என்றார். மதுரை ஆதீனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், பூஜை செய்வது, அன்னதானம் வழங்குவது என்ற பெயரில் மடத்துக்குள் நுழைந்து நித்யானந்தா பிரச்னை செய்ய வாய்ப்புள்ளதால் அவருக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது நீதிபதி குறுக்கிட்டு, வழிபாடு செய்வதற்கும், அன்னதானம் செய்வதற்கும் யாருக்கும் தடை விதிக்க இயலாது. மனுதாரர் பாதுகாப்புக் கோரி காவல்துறையினரிடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை விளக்குத்தூண் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com