எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2019 தேர்தலில் வாரணாசியில் மோடி தோற்பார்: ராகுல்காந்தி

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் வரும் 2019 மக்களவை பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியிலேயே
எதிர்கட்சிகள் ஒன்றிணைந்தால் 2019 தேர்தலில் வாரணாசியில் மோடி தோற்பார்: ராகுல்காந்தி

பெங்களூரு: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் வரும் 2019 மக்களவை பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியிலேயே தோற்பார் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் மே மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்களும், பாஜக தலைவர்களும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பெங்களூரு நகருக்கு பிரச்சாரம் செய்ய வருகை தந்துள்ள ராகுல் காந்தி, செய்தியாளர்களிடம் பேசுகையில், 2019 மக்களவை பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என நான் நினைக்கவில்லை. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன்சமாஜ் கட்சியும் கூட்டணி சேர்ந்தால், மோடி அவரின் வாரணாசி தொகுதியில் தோற்பார்.

உத்தரப்பிரதேசம், பிகாரில் அண்மையில் நடைபெற்ற மக்களவை இடத்தேர்தலில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டதால் பாஜகவை வீழ்த்தியதாக குறிப்பிட்ட ராகுல், மூன்றாவது அணிக்கு தற்போது அவசியம் இல்லை என்றார். மேலும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மற்ற எதிர்கட்சி தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்றும் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டு கூட்டணி உடைந்து வருகிறது. நீண்டகாலத்துக்கு தொடராது. சிறுபான்மை மக்கள் மத்தியிலும், தலித் மக்கள் மத்தியிலும் ஆர்எஸ்எஸ் அமைப்பு வெறுப்பைத் தூண்டி வருகிறது. மக்களை கொல்லும் சம்பவங்களை தூண்டி வரும் ஆர்எஸ்எஸ் கொள்கைக்கு முடிவு கட்ட வேண்டும். மக்கள் நலுனுக்கு எதிரான நடவடிக்கைகள் அனைத்தும் தேர்தலில் அவர்களுக்கு எதிராக ஒன்று சேரும்.

பாஜக வெற்றி பெறாது என்பதற்கு 2 முக்கியக் காரணங்களைக் கூற முடியும், ஒன்று தலித் மக்கள் அதிருப்தி அடைந்து இருப்பது, மற்றொரு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து வருகின்றன. இவை அனைத்தும் ஒரு புள்ளியில் இணைகின்றன. இதனால், கூட்டணிவலு மேலும் அதிகரிக்கும்.

உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ் கட்சிகள் ஒருங்கிணைந்து 2019 மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து களத்தில் நின்றால், பாஜக தோல்வி அடைவது உறுதி.

பிகார், மேற்கு வங்கம், தமிழகம் ஆகியவற்றில் பாஜகவுக்கு எதிரான அலை அதிகமாக உருவாகி வருகிறது. அப்படி இருக்கும்போது பாஜக எங்குபோய் வெற்றி பெறுவார்கள்.

ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியப் பிரதேசம், குஜராத், ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுவிடும். ஆதலால் பாஜவுக்கு அங்கும் வெற்றிவாய்ப்பு இருக்காது என்றார்.

பாஜகவும், பிரதமர் மோடியும் நாட்டை வழிநடத்திச் செல்லும் பாதையில் இருந்து விலகிவிட்டார்கள். ஒருதனி நபரால் நாட்டை வழிநடத்த முடியாது. மக்களின் கருத்துகளைக் கேட்டு, அவர்களுக்கு ஏற்றார்போல் பணியாற்ற வேண்டும். 4 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி திடீரென மிகப்பெரிய இழப்பை உணர்ந்துள்ளார்.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் மோடி ஈடுபட்டு இருந்தபோது எங்கு திரும்பினாலும் மோடி, மோடி என்று குரல் கேட்பதை அவர் கேட்டிருக்கலாம். ஆனால், அருகே சென்று அதை கேட்டால்தான் தெரியும், அவர்கள் உண்மையான தொண்டர்கள் இல்லை, பணம் பெற்றுக்கொண்டு கோஷமிடுகிறார்கள் என்று ராகுல் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com