உ.பி.யில் காவி நிறத்திற்கு மாறிய அம்பேத்கர் சிலையால் மீண்டும் சர்ச்சை

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் படாவுன் பகுதியில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்ட
உ.பி.யில் காவி நிறத்திற்கு மாறிய அம்பேத்கர் சிலையால் மீண்டும் சர்ச்சை

லக்னௌ: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பதாயூன் பகுதியில் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை நீல நிறத்தில் இருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் யோகி தலைமையிலான பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததில் இருந்து மாநிலத்தில் பல அதிரடி சம்பவங்களும், பரபரப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.  

உத்தரப் பிரதேச மாநிலம், பல்லியா மாவட்டம், தேத்வாரி கிராமத்தில் இருக்கும் அம்பேத்கரின் சிலையின் கை, கால் பகுதிகளும், தலைப்பகுதியும் கடந்த சனிக்கிழமை காலை (ஏப் 7).சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதுகுறித்த தகவல் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்த தகவலின்பேரில், பதாயூனில் உள்ள துக்ரியா கிராமத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கரின் சிலையை அதிகாரிகள் உடனடியாக அங்கிருந்து அகற்றிவிட்டு  துணியால் மூடி வைத்தனர். பின்னர் அந்த சிலைக்குப் பதிலாக வேறு சிலையை அங்கு அதிகாரிகள் வைத்தனர். அம்பேத்கரின் சிலைகள் உடைக்கப்பட்டது குறித்து அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதேபோன்று பெரோஸாபாத், இடாவா, சித்தார்த்நகர், அலாகாபாத் மாவட்டங்களிலும் அம்பேத்கரின் சிலைகள் அண்மையில் உடைக்கப்பட்டன. 

இதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு தலைவர்களின் சிலையை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், அம்பேத்கர் சிலையை சேதப்படுத்திய நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில், பதாயூன் நகரத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை மாவட்ட நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்டது. சேதப்படுத்தப்பட்ட நீல நிற அம்பேத்கர் சிலை தற்போது காவி நிறத்திற்கு மாற்றப்பட்டு நிறுவப்பட்டுள்ளது. சீரமைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் சிலை மீது நீலம் நிறம் அடிப்பதற்கு பதிலாக காவி நிறம் அடிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் சர்ச்சையை எழுந்துள்ளது.

யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்றது முதல்வர் அலுவலகம் உள்பட அரசு அலுவகங்கள் காவி நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com