ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 21 பேர் சிறையில் அடைப்பு

சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 21 பேர் சிறையில் அடைப்பு

சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஒரு வாரத்துக்கும் மேலாக அரசியல் கட்சிகள், தமிழ் இயக்கங்கள், விவசாய சங்கங்கள், திரைப்படத்துறையினர் சார்பில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல்.போட்டியை நடத்தக்கூடாது. மீறி போட்டி நடந்தால், மைதானத்தில் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று பல்வேறு அமைப்புகள் கூறியிருந்தன.

ஆனால், ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டபடி போட்டி நடைபெறும் என அறிவித்தது. பாதுகாப்புக்காக கமாண்டோ வீரர்கள், அதி தீவிரப்படை வீரர்கள் உள்ளிட்ட 4 ஆயிரம் போலீஸார் குவிக்கப்பட்டனர். அதேவேளையில் ரசிகர்களுக்குக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. 

போராட்ட அறிவிப்பின் எதிரொலியாக சேப்பாக்கத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் விடுதலை சிறுத்தைக் கட்சி, நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இவர்களில் விடுதலை சிறுத்தை கட்சியினர் 63 பேர், தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் 75 பேர், நாம் தமிழர் கட்சி 237 பேர், தமிழர் எழுச்சி இயக்கத்தின் 32 பேர் என மொத்தம் 780 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் திருமண மண்டபங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர். கிரிக்கெட் போட்டி நிறைவடைந்ததை அடுத்து அனைவரையும் காவல் துறையினர் விடுவித்தனர். சென்னை எழும்பூரில் தங்கவைக்கப்பட்டிருந்த, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சட்டமன்ற உறுப்பினர் தமிமூன் அன்சாரி, இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இன்று புதன்கிழமை நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒரு இளைஞர் தாக்கியதில், சங்கர்நகர் குற்றப்பிரிவு முதல்நிலைக் காவலர் செந்தில் காயமடைந்தார். இதில் காவலர் தாக்கப்பட்டது, கிரிக்கெட் ரசிகர்கள் தாக்கப்பட்டது ஆகியவை குறித்து திருவல்லிக்கேணி போலீஸார் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து, இயக்குநர் பாரதிராஜா, சீமான், கருணாஸ் உள்ளிட்ட 500 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அண்ணாசாலை, சேப்பாக்கம் மற்றும் மைதானம் அருகே போராட்டம் நடத்தியவர்கள் மீது 5 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 10 பேர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் அண்ணாசாலையில் மறியலின் போது எஸ்.ஐ. உட்பட 3 போலீஸாரை தாக்கியது, மைதானத்திற்குள் காலணி வீசிய உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 21 பேர் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com