தேர்தல் பத்திரங்களின் பாதுகாப்பு அம்சங்கள்: மத்திய அரசு விளக்கம் 

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) இருந்து தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கலாம்
தேர்தல் பத்திரங்களின் பாதுகாப்பு அம்சங்கள்: மத்திய அரசு விளக்கம் 

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) இருந்து தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தேர்தல் பத்திரங்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தற்போது மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - 

2018 ஜனவரி 2-ஆம் தேதி தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. தேர்தல் பத்திரம் என்பது, கடன் வாங்கும்போது எழுதிக் கொடுக்கப்படும் பிராமிசரி நோட்டு போன்றதாகும்.

தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்கள் தங்களைப் பற்றிய தகவல்களைக் கொடுத்து, வங்கிக் கணக்கின் மூலமாக அதற்கான தொகையைச்  செலுத்தினால் மட்டுமே அவற்றை வாங்க அனுமதிக்கப்படுவார்கள்.  அந்தப் பத்திரத்தில் பெயரோ, வேறு எந்தத் தகவல்களோ இருக்காது என்பதால், அதை வாங்கியவர் யார் என்பதைத்  தெரிந்துகொள்ள முடியாது. அதேபோல, எந்தக் கட்சிக்கு இந்தப் பத்திரத்தை வழங்குகிறோம் என்ற விவரமும் அதில் இராது. எனவே எந்தக் குறிப்பிட்ட பத்திரமும் யாரால் வாங்கப்பட்டது, எந்தக் கட்சியுடன் தொடர்புடையது என்று அடையாளம் காண இயலாது.

போலிப் பத்திரங்களை அளிப்பது, மோசடி செய்வது ஆகியவற்றைக் களையும்வகையில் பாதுகாப்பு அம்சங்கள் தேர்தல் பத்திரங்களில் இடம்பெற்றுள்ளன. அதில் ஒன்று, பத்திரங்களில் இடம்பெற்றிருக்கும்  வரிசை எண்களை வெறும் கண்களால் பார்க்க இயலாது. இந்த எண்ணைப் பத்திரம் வாங்குபவர் மற்றும் பத்திரத்தை டெபாசிட் செய்யும் அரசியல் கட்சியுடன் தொடர்புபடுத்தி எந்த ஆவணத்தையும் பாரத ஸ்டேட் வங்கி பதிவு செய்வதில்லை. அதனால், பத்திரத்தை வங்கி வழங்கும்போது, எந்த அரசியல்கட்சியுடனும் அதைச் சம்பந்தப்படுத்துவதில்லை. இவ்வாறு நன்கொடை வழங்குபவர் அல்லது பத்திரம் வாங்குவோர்களைக்  கண்டுபிடிக்க இந்த எண் பயன்படுத்தப்படுவதில்லை.

மேலும், பாரத ஸ்டேட் வங்கி இந்த வரிசை எண்ணை அரசு மற்றும் அதைப் பயன்படுத்துவோர் உட்பட யாரிடமும் பகிர்ந்துகொள்வதுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com