பேராசிரியை  நிர்மலா தேவி யாரென்றே எனக்கு தெரியாது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கல்லூரி பேராசிரியை விவகாரம் தொடர்பாக ஒருநபர் குழு விசாரணை அமைக்கப்பட்டுள்ளது.
பேராசிரியை  நிர்மலா தேவி யாரென்றே எனக்கு தெரியாது: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

கல்லூரி பேராசிரியை விவகாரம் தொடர்பாக ஒருநபர் குழு விசாரணை அமைக்கப்பட்டுள்ளது. யாரையும் காப்பாற்ற முயலவில்லை என ஆளுநர் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: -

மாணவிகளை பேராசிரியை தவறாக வழி நடத்தியது கண்டிக்கத்தக்கது. பேராசிரியை விவகாரத்தில் சிறு தவறு நடந்துள்ளது. நிர்மலா தேவி யாரென்றே எனக்கு தெரியாது. இந்த விவகாரத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். 

இது குறித்து விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு அவசியமில்லை. அந்த குழு அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் யாரையும் காப்பாற்ற முயலவில்லை என்றார். என் மீது சுமத்தப்படும் குற்றங்கள் அடிப்படை ஆதாரமற்றவையாகும், எனக்கு 78 வயது ஆகிறது, எனக்கு பேரன், பேத்திகள் உள்ளனர். நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானம் தனது அறிக்கையை 30ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறினார். 

பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர்., பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்க மாநில அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமில்லை. அரசியலமைப்பு சட்டப்படி ஆளுநரே மாநிலத்தின் தலைவர். பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு பெண் உறுப்பினர்கள் தேவையென்றால், விசாரணைக்குழு எடுத்துக்கொள்ளலாம். 

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை கேட்காமல் பல்கலைக்கழக நிர்வாகம் 5 பேர் கொண்ட குழுவை நியமித்தது. என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன் பல்கலைக்கழக செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வருகிறேன். தகுதியின் அடிப்படையில் மட்டுமே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் நடைபெற்றது என்று கூறினார். 

மேலும் தமிழகத்தில் உள்ள கிராமங்களை தெரிந்து கொள்ளவே பயணம் செய்தேன்; நான் ஆய்வு செய்யவில்லை. காவிரி பிரச்னை தொடர்பாக மத்திய அரசிடம் எடுத்து கூறியுள்ளேன். தில்லி செல்லும்போதெல்லாம் காவிரி விவகாரம் பற்றி பேசினேன்.   காவிரி விவகாரம் தொடர்பாக இன்று கூட மத்திய அமைச்சர் கட்கரியிடம் பேசினேன். டெல்டா விவசாயிகள் பயன்பெற காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைப்பதே சரி என பேசினேன். காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்தார்.  என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com