ஐபிஎல் போட்டி சூதாட்டம்: நொய்டாவில் 3 பேர் கைது

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு
ஐபிஎல் போட்டி சூதாட்டம்: நொய்டாவில் 3 பேர் கைது

நொய்டா: உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ரூ.21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சார்பில் டி 20 ஓவர்களை அடிப்படையாகக் கொண்டு பிரீமியர் லீக் போட்டிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. சரியாக 10 ஆண்டுகளுக்கு முன்பு 2008-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18-ம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் என்ற பெயரில் சுருக்கமாக ஐபிஎல் என்றழைக்கப்படும் போட்டிகள் தொடங்கின. தனியார் பெரு நிறுவனங்கள், நபர்களுக்கு சொந்தமான 8 அணிகள் கொண்ட 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டன. 

இத்தகைய சீரும் சிறப்பும் பெற்ற ஐபிஎல் போட்டிகள், பல்வேறு பிரச்னைகள், புகார்களுக்கும் ஆளானது. ஐபிஎல் போட்டிகள் நிறுவனரான லலிலித் மோடி, கடந்த 2010-இல் ஒழுக்கமின்மை, நிதி மோசடி போன்ற புகார்களால் பிசிசிஐயால் நீக்கப்பட்டார். அவருக்கு எதிராக வாரியத்தால் விசாரணை நடத்தப்பட்டு 2013-இல் நிரந்தரமாக தடை விதிக்கப்பட்டது. 

அதே ஆண்டில் ஸ்பாட் பிக்சிங் எனப்படும் சூதாட்டப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக தில்லிலி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ராஜஸ்தான் அணியைச் சேர்ந்த ஸ்ரீசாந்த், அஜித் சண்டியலா, அங்கித் சவாண் உள்ளிட்ட 3 வீரர்களை கைது செய்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகி குருநாத் மெய்யப்பனும், பெட்டிங் மற்றும் புக்கிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.

இதன் எதிரொலியாக 3 வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் மெய்யப்பன்,, ராஜஸ்தான் இணை நிர்வாகி ராஜ்குந்த்ரா ஆகியோருக்கு தடை விதிக்கப்பட்டது.

நிதி முறைகேடு புகார்கள் எதிரொலியாக உச்சநீதின்றத்தின் கண்காணிப்பின் கீழ் பிசிசிஐ கொண்டு வரப்பட்டது. சிஓஏ எனப்படும் நிர்வாகிகள் குழுவை அமைத்தது. நீதிபதி லோதா தலைமையிலான குழு பிசிசிஐ சீரமைப்புக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளது. பிசிசிஐ அமைப்புக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்தாலும், ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு கடும் வளர்ச்சியைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், 11வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளை மையமாக வைத்து முக்கிய நகரங்களில் பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வந்த தகவலை அடுத்து போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சூதாட்ட கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் சிலர் ஐபிஎல் போட்டிகளை மையமாக வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சிறப்பு அதிரடிப் படை போலீஸார், சூதாட்டம் நடந்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 11வது தளத்தில் இருந்த சூதாட்ட கும்பலைச் சேர்ந்த 3 பேரை சுற்றி வலைத்து கைது செய்தனர். 

அவர்களிடம் இருந்த ரூ.21 லட்சம் பணம், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 40 செல்போன்கள், 3 லேப்டாப், 2 எல்இஇ டிவி மற்றும் ஒரு பிரின்டகளையும் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com