திருடன் என நினைத்து கிராம மக்கள் கல்லால் தாக்கியதில் கல்லூரி மாணவர் சாவு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திருடன் என நினைத்து கல்லூரி மாணவர் மீது கிராம மக்கள் கல்வீசி தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.
திருடன் என நினைத்து கிராம மக்கள் கல்லால் தாக்கியதில் கல்லூரி மாணவர் சாவு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திருடன் என நினைத்து கல்லூரி மாணவர் மீது கிராம மக்கள் கல்வீசி தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

செய்யாறு அருகேயுள்ள வெம்பாக்கத்தை அடுத்துள்ள மோரணம், சுமங்கலி, வெங்கட்ராயன்பேட்டை, திருப்பனமூர் ஆகிய பகுதிகளில் மர்ம நபர்கள் குழந்தைகளை கடத்திச் செல்வதாகவும், வீடு புகுந்து திருடுவதாகவும் கட்செவி அஞ்சலில் தகவல் பரவியது.

இதையடுத்து, சுமங்கலி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் குழுவாகக் கூடி சில தினங்களாக இரவு நேரத்தில் அந்தப் பகுதி வழியாகச் செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பி வந்ததாகத் தெரிகிறது.

இதேபோன்று, சனிக்கிழமை நள்ளிரவு சுமங்கலி கிராம மக்கள் குழுவாக கூடியிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் மூவர் சென்றனர். சந்தேகத்தின் பேரில், அந்த மோட்டார் சைக்கிளை கிராம மக்கள் நிறுத்த முயற்சித்தனர். ஆனால், மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் பயத்தில், நிறுத்தாமல் வேகமாகச் சென்றனராம்.

இதனால், சந்தேகமடைந்த கிராம மக்கள் அவர்களைத் துரத்தினர். அவர்களைப் பிடிக்க முடியாததால் கல்வீசி தாக்கினர். இதில் ஒருவர் பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினர்.

தகவலறிந்த மோரணம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதில், உயிரிழந்தவர் செய்யாறு வட்டம், தென்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் சதாசிவம் என்பது தெரிய வந்தது.

இவர் தனியார் கல்லூரியில் பி.காம்.  2 -ஆம் ஆண்டு படித்து வருவதாகவும், நள்ளிரவில் பேருந்து இல்லாததால் வெம்பாக்கத்தில் உள்ள நண்பர் ஆனந்தனை அழைத்துவர மோட்டார் சைக்கிளில் மூவரும் சென்றதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

மாணவர் சதாசிவத்தின் உடலை கைப்பற்றிய போலீஸார், பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்: இந்த நிலையில், சதாசிவத்தின் உறவினர்கள் செய்யாறு அரசு மருத்துவமனை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். செய்யாறு டிஎஸ்பி குணசேகரன் மற்றும் போலீஸார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு நடத்தினர்.

இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது. அப்போது, குற்றவாளிகளை பிடிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து மோரணம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com