மோடி ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது: மன்மோகன் சிங் கடும் தாக்கு

நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளது
மோடி ஆட்சியில் ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது: மன்மோகன் சிங் கடும் தாக்கு

புதுதில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாஜகவின் 4 ஆண்டு கால ஆட்சியில் ஜனநாயகம் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி உள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக, ‘ஜன் ஆக்ரோஷ்’ என்ற பெயரில் தில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பிரம்மாண்ட பேரணியும், ராம் லீலா மைதானத்தில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டு பேசினார்கள்.

இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்தபின் எந்த வாக்குறுதிகளையும் மோடி நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டினார்.

சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களும் மிகுந்த ஆத்திரத்திலும், கோபத்திலும் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளாக மக்களின் பாதுகாப்பிலும் பெருத்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மக்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்பட்டுள்ளன, வேலையின்மை அதிகரித்துள்ளதால் இளைஞர்கள் கவலை அடைந்துள்ளனர்.

நாட்டில் ஊழல் மோசமடைந்து வருவதால், மோடி அரசுக்கு எதிரான மனநிலை நாட்டு மக்களிடம் எழுந்துள்ளது. சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. சிறுபான்மையினர், தலித்துகளுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன. பெண்கள், சிறு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை அட்டூழியங்கள் அதிகரித்து வருகின்றன.

மோடியின் அரசு செயல்படும் முறை, நாட்டில் ஜனநாயகத்துக்கு மிகுந்த அச்சுறுத்தலாக உள்ளது. கடந்த சில வாரங்களாக நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரிந்திருக்கும்.

மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தும், ஆனால், அதை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளாமல் சதி செய்து முடக்கிவிட்டது என்றார்.

நாடாளுமன்றம் முறையாகச் செயல்படவில்லை என்றால், அது நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தை உண்டாக்கும். இந்திய அரசியல்சாசனம் நமக்கு கொடுத்திருக்கும் பரிசு ஜனநாயகம். அதை நாம் வலுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

ஆனால், இன்று அரசியல்சாசனம் கொடுத்த விஷயங்கள், அமைப்புகள் எல்லாம் இழிவுபடுத்தும் சூழல் ஒன்று இன்று உருவாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றவோ அல்லது விவாதத்துக்கு எடுக்கவோ இல்லாவிட்டாலே அது ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டதாக கொள்ளவேண்டும் என்று கூறினார்.

வைர வியாபாரி நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் ஆயிரக்கணக்கான கோடி பணத்தை கொள்ளையடித்து நாட்டை விட்டு தப்பி இருக்கிறார்கள். இதை அனைவரும் பார்த்தோம். இது நாட்டில் உள்ள வங்கிகளின் ஆரோக்கியத்தை வலிமையை பாதித்துள்ளது. 

உலகயளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. சாமானிய மக்களை கடுமையாக பாதித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதற்கு ஏன் இந்த அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பினார். 

"ராகுல் காந்தி இந்த நாட்டை சிறந்த இடத்திற்கு கொண்டு செல்வதற்கான காலம் வந்துவிட்டது," என்று மன்மோகன் சிங் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com