விண்ணில் சீறிப்பாய்ந்தது 'பார்கர் சோலார் புரோப்' நாஸா விண்கலம்!

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா சூரியனை ஆய்வு செய்வதற்காக 'பார்க்கர் சோலார் புரோப்' விண்கலத்தை நாஸா
விண்ணில் சீறிப்பாய்ந்தது 'பார்கர் சோலார் புரோப்' நாஸா விண்கலம்!


வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா சூரியனை ஆய்வு செய்வதற்காக 'பார்க்கர் சோலார் புரோப்' விண்கலத்தை நாஸா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

ஃபுளோரிடா மாகாணம் கேப் கெனவரல் ஏவுதளத்தில் இருந்து டெல்டா 4 ராக்கெட் மூலம் 'பார்க்கர் சோலார் புரோப்' விண்கலம் இந்திய நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை 1 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.

ஒரு கார் அளவில் உள்ள பார்க்கர் விண்கலம், அமெரிக்க நேரப்படி நேற்று சனிக்கிழமை அதிகாலை 3.33 மணிக்கு செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் ஏற்பட்ட வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.  

பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம், சூரியனைச் சுற்றியுள்ள ஒளி வட்டப் பகுதியை ஆய்வு செய்வதுதான் இந்த விண்கலத்தில் முக்கியப் பணியாகும். சூரியனை குறித்து இதுவரை அறியப்படாத தகவல்களை இந்த விண்கலன் வழங்கும் என்று நாஸா கூறியுள்ளது.

சூரியனின் உள்பரப்பைவிட அதனைச் சுற்றியுள்ள ஒளி வட்டப் பகுதி 300 மடங்கு அதிக வெப்பமுடையது. இந்த வெப்பத்தை தாங்கும் வகையில் 'பார்க்கர் சோலார் புரோப்' விண்கலத்தில் 11.43 செ.மீ. தடிமனுள்ள கார்பனால் ஆன வெப்பத் தடுப்பு பட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் எடை 612 கிலோ. 9 அடி நீளமும், 10 இன்ச் கொண்டது. இது 1,371 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தாங்க வல்லது. நொடிக்கு 190 கிலோ மீட்டர் வேகத்திலும், மணிக்கு 6.9 லட்சம் கி.மீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. இந்த விண்கலம் சூரியனின் மேற்பரப்பு அருகே, 59.5 லட்சம் கி.மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும். இதுவரை எந்தவொரு விண்கலமும், இதனை எட்டியதில்லை என கூறப்படுகிறது. 

சூரியன் குறித்த தகவலை திரட்டி வர கடந்த 1970-இல் விண்வெளிக்குச் சென்ற முதல் விண்கலமான ‘ஹீலியஸ் 2’ சூரியனை சுமார் 27 மில்லியன் மைல் தூரத்தில் இருந்துதான் ஆய்வு செய்ய முடிந்தது. அதனால் உலக அழிவை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் தொடர்பான போதிய தகவல்களை இதுவரை திரட்ட முடியவில்லை.

இந்த நிலையில் இதுவரை எந்த விண்கலமும் நெருங்காத கொரோனா என்னும் சூரியனின் வெளியடுக்கை இந்த விண்கலம் சுமார் ஆறாண்டுகளில், அதாவது 2024-ஆம் ஆண்டு சென்றடைந்து, பூமியை தாக்கும் சூரியப் புயல் எப்படி உருவாகிறது என்பதை கண்டறிந்து தகவல்களை பூமிக்கு அனுப்புவதே இதன் செயல். 

அமெரிக்க ஆராய்ச்சியாளர் யூஜின் பார்கரை கவுரவப்படுத்தும் விதமாக, இதற்கு 'பார்கர் சோலார் புரோப்' என பெயரிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உயிருடன் இருக்கும் அறிஞரின் பெயர் ஒரு விண்கலத்துக்கு சூட்டப்படுவது இதுவே முதல்முறையாகும்.

'பார்க்கர் சோலார் புரோப்' சுமார் 6 ஆண்டுகள் மற்றும் 11 மாதங்களில் சூரியனை 24 முறை சுற்றி வந்து ஆய்வு செய்யும் என்கிறது நாஸா. 

இது தொடர்பாக மிச்சிகன் பல்கலைக்கழக அறிஞர்கள் கூறுகையில், பார்க்கர் விண்கலம் தனது பணியை சிறப்பாக செய்யும் பட்சத்தில் சூரியனின் வெப்ப அலைகள் பூமியை எப்போது அதிகம் தாக்கும் என்பதை நாம் முன்னதாகவே கணிக்க முடியும்' என்றனர்.

மனிதன் படைத்த விண்கலங்களிலேயே மிகவும் வேகமானது பார்க்கர் விண்கலம் என்றும் விஞ்ஞானியான நிக்கி பாக்ஸ் கூறினார். 

'பார்க்கர் சோலார் புரோப்' என்பது சூரியனுடன் ஒரு சந்திப்புக்கு வழிவகுக்கும் "என்று நாஸா தனது டுவிட்டர் பக்க பதிவில்  தெரிவித்துள்ளது.

நாசாவின் ஏவுகணை செலுத்து இயக்குநர் ஓமர் பேயஸ் "'பார்க்கர் சோலார் புரோப்' இன்றுவரை மிகவும் சவாலான பணியாகவே இருந்து வந்தது, அதனை வெற்றிகரமாக நடத்துக்காட்டிய குழுவினரை நினைத்து நான் மிகவும் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 

கடந்த 2009-ஆம் ஆண்டு அமெரிக்க பட்ஜெட்டில் 'பார்க்கர் சோலார் புரோப்' விண்கலத்தை தயாரிக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2015-ஆம் ஆண்டே இந்த விண்கலத்தை விண்ணில் ஏவ முதலில் திட்டமிடப்பட்டது. எனினும், பல்வேறு நடைமுறைச் சிக்கல் காரணமாக இன்று விண்ணில் ஏவப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com