ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 17-ல் விசாரணை

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 17-ஆம்  தேதி விசாரணைக்கு வர உள்ளது. 
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 17-ல் விசாரணை


புதுதில்லி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் ஆகஸ்ட் 17-ஆம்  தேதி விசாரணைக்கு வர உள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே 22-ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தால், தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது. இதைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு கடந்த மே 28-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது. ஸ்டெர்லைட் ஆலை சீல்' வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திலும் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்தது. 

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கக் கோரியும், தமிழக அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக் கோரியும் வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஏ.கே. கோயல் தலைமையிலான அமர்வு ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மட்டும் மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்துக்கு கடந்த வியாழக்கிழமை (ஆக.9) அனுமதி அளித்தது. மேலும் வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

இந்நிலையில், மக்களின் நலன் கருதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு எதிராக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்ய வேதாந்தா குழுமத்திற்கு முகாந்திரம் இல்லை. இது தொடர்பாக இந்நிறுவனம் ஏற்கெனவே மேல்முறையீட்டு ஆணையத்தில் (தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்) முறையீடு செய்துள்ளது. ஆலை சீல்' வைக்கப்பட்டதற்கு எதிராகவும் ஆலைக்கு மின்சாரம் வழங்க கோரியும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இந்நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. 

இந்நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மேல்முறையீட்டு மனு ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அளித்த அனுமதியை ரத்து செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடல் விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என  தமிழக அரசின் சார்பில் வழக்குரைஞர் யோகேஷ் கண்ணா உச்ச நீதிமன்றத்தில் நேற்று திங்கள்கிழமை மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். 

இம்மனு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக விசாரிக்க கோரிய தமிழக அரசு கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.

தமிழ அரசின் வழக்கு விசாரணை வரும் 17-ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com