வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய கேரளா செல்கிறார் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை மாலை கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்திற்கு செல்கிறார். 
வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஆய்வு செய்ய கேரளா செல்கிறார் மோடி!

புது தில்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை மாலை கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மாநிலத்திற்கு செல்கிறார். 

கடந்த ஒரு வார காலமாக கேரளத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 94-ஆக உயர்ந்துள்ளது. 50 ஆயிரம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கனமழையால் இடுக்கி மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.  

வரலாறு காணாத வகையில் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளின் மேற்புறத்தில் மக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மீட்பு பணிகளும் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் இராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல்படை மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை, மனிதவளத்துறை, படகுகள் மற்றும் ஹெலிகொப்டர்களை கொண்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுபட்டு வருகின்றனர். 

நேற்று மட்டும் 926 பேர் கோழிக்கோடு, எர்ணாகுளம், திருச்சூர், மற்றும் ஆலப்புழா ஆகிய இடங்களில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டுவரப்பட்டனர். மேலும், 35 அடி நீளமுள்ள பாலம் ஒன்றை கட்டிய ராணுவத்தினர், மலம்புழாவின் வயல்காடு கிராமத்திலிருந்து சிறுவர்களும், மூத்த குடிமக்கள் என 100 பேரைக் காப்பாற்றினர். 

திருவனந்தபுரம், இடுக்கி, வயநாடு, கண்ணூர் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் மொத்தமுள்ள 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன. பம்பை, பெரியாறு, வாமனபுரம் உள்பட அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றன. இதன் காரணமாக போக்குவரத்து, ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 28-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பிரதமர் மோடி கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மூன்றாவது முறையாக வெள்த்தின் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவில், ”தற்போது கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். இருவரும் வெள்ள நிலவரம் குறித்து பேசினோம். வெள்ளத்தால் சூழப்பட்ட மாவட்டங்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரணப்பணிகள் குறித்து ஆலோசித்தோம். வெள்ளம் காரணமாக அங்கு ஏற்பட்டுள்ள துரதிஷ்டவசமான சூழ்நிலையை காண இன்று மாலை கேரளா செல்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com