கேரளாவில் கனமழை, வெள்ளம். நிலச்சரிவால் பலியானோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்வு

கேரளாவில் கனமழை, வெள்ளம். நிலச்சரிவால் பலியானோரின் எண்ணிக்கை 97-இல் இருந்து 167-ஆக உயர்ந்துள்ளதாக
கேரளாவில் கனமழை, வெள்ளம். நிலச்சரிவால் பலியானோரின் எண்ணிக்கை 167 ஆக உயர்வு


திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழை, வெள்ளம். நிலச்சரிவால் பலியானோரின் எண்ணிக்கை 97-இல் இருந்து 167-ஆக உயர்ந்துள்ளதாக அந்த மாநில முதல்வர் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கடந்த ஒரு வார காலமாக கேரளத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் உள்ளிட்ட இடர்பாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 95-ஆக உயர்ந்தது.

வரலாறு காணாத வகையில் பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளின் மேற்புறத்தில் மக்கள் தஞ்சம் அடைந்து வருகின்றனர். மீட்பு பணிகளும் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்தச் சூழலில், பாலக்காடு மாவட்டம், நென்மாரா நகரில் வெள்ளத்தில் சிக்கி வியாழக்கிழமை 8 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். 

கேரளத்தில் நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது. மத்திய அரசிடம் இருந்து மேலும் நிவாரண உதவிகளை எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரிடம் தொலைபேசியில் தெரிவித்ததாகவும், இதுபோன்ற வெள்ளத்தை இதற்கு முன்பு கேரளம் சந்தித்ததில்லை என்றார் பினராயி விஜயன்.

இதையடுத்து, மீட்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்து தருமாறு பாதுகாப்புத் துறை அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.

கேரளத்தில் மீட்புப் பணிகளில் ஈடுபட மேலும் 12 தேசியப் பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) குழுக்களை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, ஆலப்புழை, கோழிக்கோடு, வயநாடு, திருச்சூர், பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் மீட்புப் பணிகளில் இந்தக் குழுக்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஒரு என்டிஆர்எஃப் குழுவில் சுமார் 45 வீரர்கள் இருப்பார்கள். இதுதவிர முப்படை வீரர்களும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

கேரளத்தில் விமானம் மற்றும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொச்சி மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 28-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பின்னர் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கேரளாவில் கனமழை வெள்ளாத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பினராய் விஜயன், கேரளாவில் கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பலியானோரின் எண்ணிக்கை 97-இல் இருந்து 167-ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து அரசின் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 14-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளன.

மாநிலத்தில் உள்ள 39 அணைகளில் 35 அணைகள் நிரம்பித் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநிலத்தின் பெரும்பகுதி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினருடன் இணைந்து முப்படை வீரர்களும் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தார். 

இந்த நிலையில், மீட்பு பணிக்காக கூடுதலாக இந்திய கடற்படைக்கு சொந்தமான 4 கப்பல்கள் கொச்சி வந்துள்ளது. இந்த மீட்புக்குழுவில் இந்த கப்பலில் வந்த கடற்படையினரும் இணைய உள்ளனர். நிவாரணப்பொருட்களும் கப்பல் மூலமாக கொண்டு வரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com