வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஒருமாத ஊதியம் அளிப்பு

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கேரள முதல்வர்
வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் ஒருமாத ஊதியம் அளிப்பு

 
புதுதில்லி:
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ஆம் ஆத்மி கட்சி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். 

கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் கனமழை வெள்ளதால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆகஸ்ட் 8 முதல் 194-க்கும் மேற்பட்ட மக்கள் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலியாகியுள்ளனர். 14 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

எனவே, கேரளா மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப மற்ற மாநிலங்கள் நிதியுதவி வழங்க வேண்டும் என்று கேரள அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து கேரளாவுக்கு உதவும் வகையில் பல்வேறு தரப்பில் இருந்து நிதியுதவிகள் வந்து கொண்டிருக்கின்றன. 

இந்நிலையில், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்துக்கு தில்லி அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்படும் என நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தார். 

மேலும், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் தங்களின் ஒருமாத ஊதியத்தை கேரள மக்களின் நிவாரணத்துக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள கேரளாவில் உள்ள நமது சகோதர, சகோதரிகளுக்கு அனைவரும் தங்களால் முடிந்ததை தாராளமாக அளித்து உதவி செய்ய வேண்டும் என கேஜரிவால் டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

மாநிலத்தில் மீட்புப் பணியில் ராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com