குடகு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் குமாரசாமி ஆய்வு

கர்நாடக மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புக்குள்ளான குடகு பகுதிகளில் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி
குடகு பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்பை ஹெலிகாப்டர் மூலம் முதல்வர் குமாரசாமி ஆய்வு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதிப்புக்குள்ளான குடகு பகுதிகளில் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி இன்று சனிக்கிழமை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். 

கர்நாடகத்தில் குடகு தென்கன்னடம், ஹாசன், சிக்மகளூரு, சிவமொக்கா மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் இம்மாவட்டத்தில் உள்ள அணைகள் நிரம்பியுள்ளன. மேலும் வெள்ளத்தில் பல இடங்களில் சாலைகள், பாலங்கள் மூழ்கியுள்ளன. 

தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் வீடுகளை இழந்து பரிதவிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், மேலும் பல நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள நிலையில், கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள கர்நாடக அரசு 200 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் குடகு மிக அதிக அளவிலான பாதிப்புக்களை சந்தித்துள்ளது. குடகு மாவட்டத்திற்கு செல்லும் சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், குடுகு மாவட்டத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன. குடகு - குஷல்நகர் இடையேயான சாலை நிலச்சரிவால் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்துள்ளது. குடகு மாவட்டத்தில் தொடர் கனமழையால் மண்மேடான பகுதியில் அமைந்துள்ள இரண்டு அடுக்கு மாடி வீடு ஒன்று, நிலச்சரிவால் சரிந்து பள்ளத்தில் இறங்கியது. இதே போன்று காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க, மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடகு பகுதிகளில் இன்று சனிக்கிழமை முதல்வர் குமாரசாமி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். 

ஆய்வுக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாநிலத்தில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, கடற்படை, ராணுவம், தீயணைப்புத் துறை, காவலர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியாளர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள சாலைகள் சீரமைக்கவும், மீட்புப்பணிகளை போர்கால் அடிப்படையில் செயல்பட முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், மாநிலத்தின் மற்ற பகுதிகளில் இருந்து பல அதிகாரிகள் குடகு மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக என தெரிவித்தார். 

மேலும், குடகு மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்தார். 
  
இதனிடையே குடகில் காண்டனஹொள்ளி கிராமம் இருந்ததற்கான அடையாளமே இல்லாத அளவிற்கு நிலச்சரிவில் புதைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com