முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு கீழ் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை: ஓ.பன்னீர்செல்வம்

முல்லைப் பெரியார் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு கீழ் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு கீழ் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை: ஓ.பன்னீர்செல்வம்


தேனி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு கீழ் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பேரிடர் மேலாண்மை திட்டத்தை அறிவிக்கக் கோரி கேரள மாநிலம் ஆலுவாவைச் சேர்ந்த ரசூல் ஜாய் தாக்கல் செய்த மனு மீது கடந்த வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில், கேரளத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சூழலை மத்திய, மாநில அரசுகள் திறம்பட கையாள வேண்டும். கேரளத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சூழலை கையாளத் தேவையான வழிமுறைகளை அளிக்க இந்த நீதிமன்றம் நிபுணர் அல்ல. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாகக் குறைப்பது தொடர்பான சாத்தியக்கூறுகளை தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழுவும், பேரிடர் மேலாண்மை துணைக் குழுவும் பரிசீலிக்க வேண்டும்.

கேரளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிவாரணப் பணிகள், புனரமைப்பு, மறுவாழ்வுப் பணிகள் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த பிரமாணப் பத்திரத்தை அந்த மாநில தலைமைச் செயலர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீட்புப் பணிகள், புனரமைப்புப் பணிகள் குறித்து தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு அளிக்கும் அறிவுறுத்தல்களை கேரளம் தயங்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், முல்லைப் பெரியாறு அணையில் நீர்மட்டத்தைக் குறைக்கும் முடிவுக்கு தமிழக அரசு கீழ்படிய வேண்டும். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஆகஸ்ட் 24-ஆம் தேதி எடுத்துக்கொள்ளப்படும் எனத் தெரித்தது.

தொடர்மழையால் தேனி - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் தமிழகம் கேரளா இடையிலான போக்குவரத்து கடந்த இரண்டு நாள்களாக நிறுத்தப்பட்டதை அடுத்து சாலையைச் சீரமைக்கும் பணி வேகமாக நடந்துவருகிறது. 

இந்நிலையில், இன்று சாலை சீரமைப்புப் பணிகளை துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரை நீரை தேக்கினாலும் அணை பாதுகாப்பாக உள்ளதாக காவிரி தொழில்நுட்பக் குழுவினர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளனர். அதனால் அணையின் பலம் குறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு கீழ் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேலும், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் கேரள மக்கள், தமிழக மக்கள் என பிரித்து பார்க்கவில்லை என்றும் கேரள மக்களுக்கு ஏற்படும், பாதிப்பை தமிழக மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு போல் நாங்களும் உணருகிறோம். அவர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் அதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம். அவர்களின் பாதிப்பையும் பார்த்துதான் நடந்துகொண்டிருக்கிறோம் என தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com