மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது கேரளா!

மெல்ல இயல்பு நிலைக்கு திரும்புகிறது கேரளா!

கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நிவாரண


கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை-வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் நிவாரண முகாம்களில் இதுவரை 7.24 லட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், வெள்ளம் சூழ்ந்த பல பகுதிகளிலிருந்து பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்டதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளதை அடுத்து நீர் தேக்கியுள்ள பகுதிகளில் வெள்ளநீர் வடிய துவங்கிய உள்ளது. இதையடுத்து மெல்ல மெல்லமாக கேரளா இயல்பு நிலை திரும்பி வருகிறது.

கேரளத்தில் கடந்த 10 நாள்களாக இடைவிடாது பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், அந்த மாநிலத்தையே புரட்டிப் போட்டுள்ளது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ராணுவம், கடற்படை, விமானப் படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவை தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

கடந்த 8-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை மழைக்கு 210 பேர் பலியாகியுள்ளனர். மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 5,645 முகாம்களில் 7.24 லட்சம் பேர் மீட்கப்பட்டு தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கானோர் மீட்கப்படாமல் நீரில் சிக்கி தவித்து வருகின்றனர். 221  பாலங்கள் பழுதடைந்துள்ளன. இன்னும் 59 பாலங்கள் வெள்ளத்திற்கு அடியில் உள்ளன. மீட்புப் பணிகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வந்தாலும், 5வது நாளாக உணவு உள்ளிட்ட நிவாரணம் வழங்கும் பணிகளுடன் சீரமைப்பு பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளதை அடுத்து கடந்த 2 நாட்களாக மழை பெய்யாததால் மக்களுக்கு சற்று ஆறுதல் அடைந்துள்ளன. 

சில இடங்களில் வெள்ளம் குறையத் தொடங்கியுள்ளதால், மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தியிருப்பதாக என்டிஆர்எஃப் தெரிவித்துள்ளது. மக்களின் மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளில் மாநில அரசும் ஈடுபட்டுள்ளது.

இதனிடையே, கேரளத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்களை அனுப்ப விரும்பும் அரசு நிறுவனங்கள், அரசு சாரா அமைப்புகள் ரயில்களில் இலவசமாக அனுப்பலாம் என்று ரயில்வே அறிவித்துள்ளது.

பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அதனை தடுப்பதற்காக ஒவ்வொரு பஞ்சாயத்துக்கும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருத்துவ சேவைகளில் ஈடுபட்டிருப்பதால் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருந்த தனது திருமணத்தை தள்ளிவைத்திருக்கிறார் அருண் சி தாஸ் என்ற மருத்துவர்.

முதல் கட்டமாக சேதமடைந்த 10,000 கி.மீ., தூரத்திலான சாலைகளை மட்டும் சீரமைக்க ரூ.4,441 கோடி தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. 

மின் இணைப்புகள், குடிநீர் விநியோகத்தை சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட உள்ளன. வெள்ளத்தில் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு இலவசமாக புத்தகங்கள் வழங்குவதற்கான செயல்களில் அரசு இறங்கி உள்ளது. 

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலம் கொச்சியில் பயணிகளுக்கான விமான சேவை இன்று மீண்டும் தொடங்கி உள்ளது. 
கொச்சி கடற்படை விமானதளத்தில் வணிக ரீதியிலான விமானம் தரையிறங்கியது.

மீட்புப் பணிகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வந்தாலும், நிவாரணம் வழங்கும் பணிகளுடன் சீரமைப்பு பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்பொழுது மழை சற்று ஓய்ந்திருப்பதால் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ள நிலையில், எதற்காகவும் காத்திருக்காமல் விரைவாக மீட்பு களத்தில் இறங்கி மக்களுக்கு உதவத் தொடங்கி விட்டார்கள் மீனவர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com