ரூ.50 கோடியை வாரிய வழங்கி மனித நேயத்தை மலரச் செய்த மலையாள மருத்துவர் ஷாம்ஷீர்!

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், அபுதாபி தலைமையகத்தில் உள்ள விபிஎஸ் சுகாதார
ரூ.50 கோடியை வாரிய வழங்கி மனித நேயத்தை மலரச் செய்த மலையாள மருத்துவர் ஷாம்ஷீர்!

கொச்சி: வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவும் வகையில், அபுதாபி தலைமையகத்தில் உள்ள விபிஎஸ் சுகாதார பராமரிப்பு அலுவலகத்தின் தலைவரான கேரளாவைச் சேர்ந்த மருத்துவர் ஷாம்ஷீர் வயாலில் ரூ.50 கோடி நிதியுதவி அளித்து மனித நேயத்தை மலரச் செய்துள்ளார். 

கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள மழை-வெள்ள பாதிப்புகளால் மொத்தமுள்ள 14 மாவட்டங்களில் 13 மாவட்டங்களில் மொத்த மக்கள் தொகை 3.48 கோடியில், சுமார் 40 சதவீதம் பேர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளத்தில் கடந்த 10 நாள்களாக பெய்த கனமழையால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளின் தீவிரத்தை கருத்தில்கொண்டு, அதிதீவிர இயற்கைப் பேரிடராக' அறிவிக்கப்பட்டுள்ளது. 

கன மழையில் 10.28 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். 2.12 லட்சம் பெண்கள் மற்றும் ஒரு லட்சம் குழந்தைகள் இதில் அடங்குவர் இவர்கள் அனைவரும் 3784 முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். 

கேரளத்தில் நேற்று திங்கள்கிழமை மழை சற்று ஓய்ந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. வீடிழந்து தவிக்கும் மக்களின் மறுவாழ்வுக்கான பணி அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், தற்போது புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, மக்களை மீண்டும் குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோல், மின் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகத்தை சீர்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் படிப்படியாக வீடு திரும்புவார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் ரூ.2600 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, ரூ.2,600 கோடி அளவுக்கு நிவாரண உதவிகள் தேவைப்படுகிறது. நிவாரண நிதி கேட்டு ஆகஸ்ட் 30-ஆம் தேதி சிறப்பு பிரதிநிதிகளுடன் தில்லி செல்ல உள்ளார் முதல்வர் பினராயி விஜயன். 

இயற்கை சீற்றத்தால் சொல்லொணா துயரத்தில் தவிக்கும் கேரள மாநிலத்துக்கு, அனைத்து கருத்து வேறுபாடுகளையும் மறந்து மனிதநேயம் என்ற ஒற்றைப் புள்ளியை மையமாகக் கொண்டு உலகம் முழுவதும் இருந்து நிதியுதவியும், பிற உதவிகளும் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

இந்நிலையில், அபுதாபி தலைமையகத்திலுள்ள சுகாதார பராமரிப்பு அலுவலகத்தின் தலைவராக இருந்து வரும் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஷாம்ஷீர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள தனது மாநிலத்திற்காக ரூ.50 கோடியை வாரிய வழங்கி மனித நேயத்தை மலரச் செய்துள்ளார். 

அவர் அளித்த நிதியுதவியை கனமழையால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வீடு கட்டித் தருவது, மருத்துவமனைகள் சீரமைப்பு  மற்றும் படிப்பு போன்றவைகளுக்கு பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

கேரள மாநில மக்களுக்கும் உலகம் முழுவதில் இருந்தும் நிதியுதவிகள் வந்து குவிந்தாலும், ஒரு தனிநபர் அதுவும் கேரளத்தைச் சேர்ந்தவரான மருத்துவர் ஒருவர் வழங்கிய அதிகப்பட்ச தொகை இது என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவின் மழை வெள்ள பாதிப்பை அடுத்து அபுதாபியில் பக்ரீத் மற்றும் ஓணம் பண்டிகை கொண்டாடுவது நிறுத்தப்பட்டுள்ளது. 

டாக்டர் ஷாம்ஷீர் பணிபுரிந்து வரும் விபிஎஸ் சுகாதார அமைப்பில் இந்தியா மற்றும் ஐரோப்பா ஆகிய நாடுகளில் 22 மருத்துவமனை மற்றும் 125 மருத்துவ மையங்கள் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ரூ.700 கோடியை நிதியுதவியாக அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com