கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. 
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை அனைத்துக்கட்சி கூட்டம்


திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. 

கேரளத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள மழை-வெள்ள பாதிப்புகளை, தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தநிலையில், கேரளத்தில் கடந்த 10 நாள்களாக பெய்த கனமழையால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகளின் தீவிரத்தை கருத்தில்கொண்டு, அதிதீவிர இயற்கைப் பேரிடராக' அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளத்தில் திங்கள்கிழமை மழை சற்று ஓய்ந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்பு மற்றும் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. வீடிழந்து தவிக்கும் மக்களின் மறுவாழ்வுக்கான பணி அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

மாநிலம் முழுவதும் பலி எண்ணிக்கை 216-ஆக அதிகரித்துள்ளது. 5,645 முகாம்களில் 7.24 லட்சம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் இருந்து பெரும்பாலானோர் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், எளிதில் அணுக முடியாத இடங்களில் ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிக பாதிப்பைச் சந்தித்த ஆலப்புழை மாவட்டம், செங்கன்னூர் பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற நிவாரணப் பொருள்களை விநியோகிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு, மக்களை மீண்டும் குடியமர்த்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. 

இதேபோல், மின் இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகத்தை சீர்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளத்துக்கு நாடு முழுவதும் இருந்து நிதியுதவியும், பிற உதவிகளும் தொடர்ந்து குவிந்து வருகின்றன. இதனிடையே, திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் இருந்து ரயில் சேவைகள் பகுதியளவு தொடங்கப்பட்டுள்ளன.

வரலாறு காணாத வெள்ள பாதிப்பால் ஆலப்புழா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்; நெடுமுடி, காலாப்புட்டு, புட்டுநாடு உள்ளிட்ட பகுதிகள் நீரில் மூழ்கி உள்ளன

இந்நிலையில், வரலாறு காணாத வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்த கேரளாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. திருவனந்தபுரத்தில் இன்று மாலை 4 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

சாலை சீரமைத்தல், உட்கட்டமைப்பு உள்ளிட்ட பணிகள் உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com