தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்குத் தான் பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்குத் தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, அழிவுக்கு பயன்படுத்தக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி
தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்குத் தான் பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

துபாய்: தொழில்நுட்பத்தை வளர்ச்சிக்குத் தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, அழிவுக்கு பயன்படுத்தக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஜோர்டான், பாலஸ்தீனம் நாடுகளைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அபுதாபி இளவரசர் அல் நெஹாயானுடன் ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளிடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர், அபுதாபியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக அபுதாபியில் கட்டப்பட உள்ள ஹிந்து கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டினார். 

பின்னர் துபாயில் நடந்த 6வது உலக அரசாங்க மாநாட்டில் 140 நாடுகளில் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு அங்கிருந்த இந்தியர்கள் மத்தியில் பேசுகையில், இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் துபாய் ஆகியவற்றுக்கு முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தன்னை விருந்தினராக அழைத்து அளிக்கப்பட்ட மரியாதை என்பது 125 கோடி இந்திய மக்களுக்கு அளிக்கப்பட்ட கவுரவமாக கருதுகிறேன் எனக் கூறிய மோடி, அரபு நாடுகள், இந்தியர்களுக்கு 2வது தாய் வீடாக திகழ்கிறது. 

அபுதாபியில் கோயில் கட்ட அனுமதி வழங்கிய பட்டத்து அரசருக்கு,125 கோடி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன். கோயில்கள் நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்கின்றன. தொழில்நுட்பத்தின் உதவியால் பாலைவனமாக இருந்த துபாய் இன்று அற்புதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. வளைகுடா அமீரகம் இந்த உலகத்துக்கே முன்னுதாரணமாக விளங்குகிறது. புதிய கண்டுபிடிப்புகளும், தொழில்நுட்பமும் துபாயின் வெற்றிக்கு காரணம். வளர்ச்சிக்கு தொழில்நுட்பம் மிகவும் முக்கியமானது. மனிதனின் சிந்தனை வேகத்தில் தொழில்நுட்பங்கள் மாற்றம் அடைந்து வருகின்றன. ஆனால், சிலர் தற்கால சைபர் தொழில்நுட்பத்தை மதம்சார்ந்த குரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துகின்றனர் என்ற கவலையையும் வெளிப்படுத்தினார்.

உலகில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டும், வறுமையும், ஊட்டச்சத்து குறைவும் இன்னும் ஒழிக்கப்படவில்லை. அதேவேளையில், சாதாரண மனிதனின் வாழ்க்கைத் தரத்தையும் தொழில்நுட்பம் மேம்படுத்துகிறது. அதில் நாம் பெரும்பகுதி பணத்தையும், நேரம் மற்றும் வளங்களை பயன்படுத்தி ஏவுகணைகள், குண்டு தயாரிப்பதில் முதலீடு செய்கிறோம். அரசாங்கங்கள் அவற்றை ஆக்கப்பூர்வமான பணிக்கு மட்டுமே பயன்படுத்தி, அனைவருக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், அழிவுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தினார்

உலக மக்கள்தொகையில் 9.5 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்ந்து வருகின்றனர். அபரிமிதமான மக்கள்தொகை பெருக்கத்துக்கு இடையில் வறுமை, வேலையில்லா திண்டாட்டம், கல்வி, வீட்டுவசதி மற்றும் மனித பேரழிவுகள் போன்ற சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. 

இவற்றை எல்லாம் நாம் முன்னேற்றத்தின் மூலம் கடந்து வந்து விடலாம். எனது தலைமையிலான அரசு தொழில்நுட்பத்தை இதற்காகதான் பயன்படுத்துகிறது. கடந்த 25 ஆண்டுகளில், தாய்வழி இறப்பு இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியும், உலகம் முழுவதும் பாதியளவுக்கும் குறைந்துவிட்டது.

4 ஆண்டுகளாக நாட்டிற்காக கடுமையாக உழைத்துள்ளேன். கடந்த 4 ஆண்டுகளில் இந்தியர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. நாடும் வளர்ச்சியடைந்துள்ளது. 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டு. மகாத்மா காந்தி கொள்கைகளை பின்பற்றி வருகிறோம். மக்களை பலனடைய செய்வதே எனது நோக்கம். கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள், 2 ஆண்டுகளாகியும் இன்னும் அழுது கொண்டுதான் இருக்கின்றனர். 

தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உயர்த்தி பேசிய மோடி, குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி, மீட்பு, மறுவடிவம் மற்றும் மறு உற்பத்தி ஆகிய ஆறு வழிமுறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என்றார். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையமாக இந்தியா வளர்ந்து வருவதாகவும் தெரிவித்தார்.

இந்திய மக்கள்தொகையில் சுமார் 65 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால் தொழில்நுட்பத்தின் வாயிலாக இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பதன் மூலம் புதிய இந்தியா என்னும் அவர்களின் கனவை நனவாக்க முடியும். உலகில் உள்ள மற்ற நாடுகளைவிட, குறைந்த செலவில் விண்வெளி திட்டங்களை இந்தியா செயல்படுத்தியுள்ளதாகவும், தொழில்நுட்ப மேம்பாட்டில், சூரிய சக்தி மிகப்பெரியதாக இருக்கும். வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் எங்கள் நாட்டு விவசாயிகளின் வருமானம் இருமடங்காக பெருகிவிடும்.  

தொழில்நுட்பம் சிந்தனை வேகத்தில் மாறி வருகிறது. தொழில்நுட்பம் உலக மாற்றத்தின் ஒரு பெரிய ஊடகமாக மாறியுள்ளது. டிஜிட்டல் புரட்சிக்குள் நுழைந்துள்ள நாம், சராசரி மக்களுக்கு நிறைவான ஆட்சியை அளிக்கும் மின்னணு ஆட்சி நிர்வாக முறையையும், மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வசதியையும் தொழில்நுட்பம் நமக்கு சாத்தியப்படுத்தியுள்ளது என்று கூறினார். 

மனிதநேயமானது, இயற்கையை வெற்றி கொள்ளும் ஒரு கருவியாகும், மனிதகுலத்தின் எதிர்காலம், நாம் இயல்புடன் போராடக்கூடாது, ஆனால் ஒத்துழைக்கும் ஒரு வழியை நாம் கண்டறிய வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் வீடியோ கான்பரன்சிங் மூலம் நாட்டில் தற்போதுள்ள உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களை மதிப்பிட்டு வருவதாக தெரிவித்த மோடி, இதில், மாநிலங்கள் மற்றும் மையங்களின் அனைத்து துறை சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் ஒன்றுசேர்கின்றன என்றார்.  

பிரச்சினைகள் மற்றும் அவற்றின் தீர்வுகள் தெளிவாக உள்ளன. உலகிற்கு முன் வரும் தசாப்தங்களில் எழும் சிக்கல்களின் தீர்வை கண்டுபிடிப்பதற்கு நாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். அதற்கு தொழில்நுட்பம் ஒரு பெரிய பங்கு வகிக்கும் என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com