நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி: வங்கி ஊழியர்கள் 8 பேர் பணியிடை நீக்கம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி ரூ.11,400 கோடி நிதி மோசடி விவகாரம் தொடர்பாக இன்று வங்கி ஊழியர்கள் 8 பேர் பணி இடை நீக்கம்
நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,400 கோடி மோசடி: வங்கி ஊழியர்கள் 8 பேர் பணியிடை நீக்கம்

பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி ரூ.11,400 கோடி நிதி மோசடி விவகாரம் தொடர்பாக இன்று வங்கி ஊழியர்கள் 8 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. 

பிரபல தொழிலதிபரும், வைர வியாபாரியுமான நீரவ் மோடி (46), பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வெர்ப் நகரில் வளர்ந்த இவர், நியூயார்க், லண்டன், பெய்ஜிங், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகிய நகரங்களில் சொந்தமாக நகைக் கடை நடத்தி வருகிறார். 'ஃபோர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்ட இந்தியச் செல்வந்தர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது. 

இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.280 கோடி மோசடி செய்ததாக, நீரவ் மோடி மீது சிபிஐயிடம் அந்த வங்கி நிர்வாகம் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி புகார் அளித்தது.

அதில், நீரவ் மோடியும், அவரது குடும்பத்தினரும், அவரது பங்குதாரர்களும், பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளின் உடந்தையுடன் இந்த மோசடியில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.  அதனடிப்படையில், நீரவ் மோடி, அவரது மனைவி ஆமி, சகோதரர் நிஷால், பங்குதாரர்களான மெஹுல் சினுபாய் சோக்ஸி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் அலுவலர்கள் கோகுல்நாத் ஷெட்டி (ஓய்வுபெற்றவர்), மனோஜ் காரட் ஆகியோருக்கு எதிராக சிபிஐ கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வழக்குப் பதிவு செய்தது. நீரவ் மோடி, அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் ஜனவரி 1-ஆம் தேதியே வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர் என்ற பரபரப்பு தகவல் நேற்று வெளியானது. . 

இந்நிலையில், நீரவ் மோடிக்கு எதிராக சிபிஐயிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி மீண்டும் புதன்கிழமை ஒரு புகார் கொடுத்தது. அதில், நீரவ் மோடி சட்ட விரோதப் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.11,400 கோடி மோசடி செய்திருப்பதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது. 

கடந்த 2011-ஆம் ஆண்டில் இருந்தே இந்த மோசடி நடைபெற்று வந்துள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்தது. இதனிடையே, ரூ.280 கோடி மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறையினர் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.

அதனடிப்படையில், மும்பை குர்லா பகுதியில் அமைந்துள்ள நீரவ் மோடியின் இல்லம், காலா கோடா பகுதியில் உள்ள அவரது நகைக் கடை, பாந்த்ரா மற்றும் லோயர் பரேல் பகுதிகளில் உள்ள அவருக்குச் சொந்தமான 3 நிறுவனங்கள், குஜராத் மாநிலம், சூரத் நகரில் 3 இடங்கள், தில்லி டிஃபன்ஸ் காலனி மற்றும் சாணக்கியபுரி ஆகிய இடங்களில் உள்ள நீரவ் மோடிக்குச் சொந்தமான நகைக் கடைகள் ஆகிய இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.

சோதனையின் முடிவில், தங்கம், வைரக் கற்கள், ரொக்கப் பணம் உள்பட ரூ.5,100 கோடி மதிப்பிலான உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதவிர, நீரவ் மோடிக்குச் சொந்தமான 6 சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறையினர் சீல் வைத்தனர். சோதனைகள் தொடந்து நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில் நீரவ் மோடி ரூ.11,400 கோடி நிதி மோசடி விவகாரத்தில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்கள் உத்தரவாதத்தைப் பெற தவறி விட்டதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இது தொடர்பாக வங்கி ஊழியர்கள் 8 பேர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளவர்கள் பொது மேலாளர் மட்ட அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com