கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பெண் பொறியாளரை காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து

சென்னை பள்ளிக்கரணையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பெண் பொறியாளரை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில்
கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பெண் பொறியாளரை காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் சந்தித்து வாழ்த்து

சென்னை: சென்னை பள்ளிக்கரணையில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட பெண் பொறியாளரை காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

நாவலூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வரும் லாவண்யா (26) என்பவர், கடந்த 12 -ஆம் தேதி, தாழம்பூர்-பெரும்பாக்கம் சாலையில் மேடவாக்கம் அரசன் கழனியிடம் வந்து கொண்டிருந்தபோது, அவரை சில மர்ம நபர்கள் வழிமறித்து இரும்பு கம்பியால் தாக்கி, அவரது 2 செல்லிடப்பேசிகள், 4 பவுன் தங்கநகை, மடிக்கணினி, மொபெட் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.

பலத்த காயமடைந்த லாவண்யா, பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து பள்ளிக்கரணை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை கண்டறிய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில், செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த லாவண்யாவின் மொபெட்டை போலீஸார் புதன்கிழமை மீட்டனர். மேலும் தனிப்படை போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த விநாயகமூர்த்தி (20), அதேப் பகுதியைச் சேர்ந்த நாராயணமூர்த்தி (19), லோகேஷ் (19) ஆகியோர் லாவண்யாவை தாக்கி வழிப்பறி செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் 3 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாவண்யாவின் செல்லிடப்பேசிகள், தாக்குதலுக்கு பயன்படுத்திய கத்தி ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 3 பேரும் கடந்த 1 2 -ஆம் தேதி நள்ளிரவு, சம்பவ இடத்தில் வழிப்பறி செய்யும் நோக்கத்துடன் நின்றுள்ளனர். அப்போது அங்கு மொபெட்டில் வந்த லாவண்யாவை வழிமறித்து தாக்கி வழிப்பறி செய்துள்ளனர். லாவண்யா நகையையும், தன்னிடமிருந்த பொருள்களையும் கொடுக்க மறுத்ததால் அவரை கத்தியால் வெட்டியுள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக மேலும் விசாரணை செய்ய உள்ளோம் என்று காவல்துறை கூடுதல் ஆணையர் எம்.சி.சாரங்கன் கூறினார். 

இந்நிலையில், கொள்ளையர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் லாவண்யாவை, காவல்துறை ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக லாவண்யா தெரிவித்தார்.  

சிறப்பான முறையில் கவனம் எடுத்து சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை ஏ.கே.விஸ்வநாதன் கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com