மு.க.ஸ்டாலின் முதல்வர் கனவு நிறைவேறாது: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி

நடிகர்கள் ரஜினி-கமல் சந்திப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை என்றும் அவர்களை ஊடகங்கள் தான்
மு.க.ஸ்டாலின் முதல்வர் கனவு நிறைவேறாது: அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி பேட்டி

சென்னை: நடிகர்கள் ரஜினி-கமல் சந்திப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை என்றும் அவர்களை ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். 

தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் வரும் புதன்கிழமை (பிப்.21) முதல் தமிழகம் முழுவதும் "நாளை நமதே" சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனக்கு பிடித்த முக்கிய தலைவர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசி வருகிறார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெற்ற கமல்ஹாசன், மக்கள் சேவைக்காகவே அரசியலுக்கு வருகிறேன் என்று தெரிவித்தார்.

கமல்ஹாசன் முக்கிய தலைவர்களை சந்தித்து பேசி வருவது அரசியல் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழ் தாத்தா உ.கே.சாமிநாசன் அவர்களின் 164-வது பிறந்த நாள் விழா சென்னையில் கொண்டாடப்பட்டது. இதையடுத்து அவரது சிலைக்கு தமிழக அமைச்சர்கள் ஜெயகுமார், மாஃபா பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில், ஆந்திராவில் கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழர்களின் சடலங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் பற்றிய விவரங்கள் கிடைத்த பின் நடவடிக்கை எடுக்கப்படும். 

ரஜினி-கமல் சந்திப்பால் தமிழகத்திற்கு எந்த பயனும் ஏற்படப்போவது இல்லை. எந்த மாற்றமும் ஏற்படாது. அவர்கள் சந்திப்பை ரூஸ்வெல்ட், வின்சென்ட் சர்ச்சில் சந்திப்பை போன்று ஊடகங்கள் தான் பெரிதுபடுத்துகின்றன. 

மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவது என்பது விட்டலாச்சாரியார் படத்தில் வருவது போன்று மாயவித்தையை காட்டி ஆட்சியை கைப்பற்ற எண்ணும் ஒரு மாய உலகத்தில் இருக்கிறார். ஸ்டாலின் முதல்வர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்று தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தில் ‘மேண்டேட்டரி’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு ஸ்டாலினுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் சட்ட வல்லுநர்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். 

அதைவிடுத்து அனைத்து கட்சி கூட்டம் என்பது தேவையற்ற ஒன்று. தமிழகத்திற்கு மறுக்கப்பட்டு 14.75 டி.எம்.சி. தண்ணீர் பெறுவது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார். 

இந்த தீர்ப்பின் மூலம் காவிரி ஆறு எங்களுக்குதான் சொந்தம் என்று இனி கர்நாடகா உரிமை கோர முடியாது. இது அவர்களுக்கு சம்மட்டி அடி என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com