தில்லியில் பரபரப்பு: முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை

தில்லி மாநில தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில், முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி
தில்லியில் பரபரப்பு: முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை

புதுதில்லி: தில்லி அரசின் தலைமைச் செயலாளர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருவது தில்லி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தில்லி தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷ் தாக்கப்பட்டதாகவும், சாதியைக் கூறி திட்டியதாக தலைமைச் செயலாளர் காவல்நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த சம்பவம் தொடர்பாக இரு சட்டப்பேரவை உறுப்பினர்களான அமானதுல்லா கான், பிரகாஷ் ஜர்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில், தில்லி தலைமைச் செயலகத்தில் அசாதாரண சூழல் நிலவிய நிலையில், புதன்கிழமை அதிகாரிகள் வழக்கம்போல் தங்கள் பணிகளை மேற்கொண்டனர். தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் தலைமைச் செயலர் அன்ஷு பிரகாஷும் தனது பணிகளை மேற்கொண்டார். ஆனால் ஆம் ஆத்மி அமைச்சர்களுடனான கூட்டங்களை தில்லி அரசு அதிகாரிகள் புறக்கணித்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். 

தில்லி அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பும், கண்ணியமும் உறுதிப்படுத்தப்படும் வரை "தில்லி அரசு அலுவலகங்கள், ஜல் போர்ட் ஆகியவற்றில் பணியாற்றும் அரசு ஐஏஎஸ், டானிக்ஸ் அதிகாரிகள், டாஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் தினந்தோறும் மதிய உணவு இடைவேளையில் தங்கள் அலுவலகங்களுக்கு வெளியே, தினமும் 1.30 மணிக்கு 5 நிமிடம் மௌனம் போராட்டத்தை கடைப்பிடப்பார்கள் என தெரிவித்திருந்தனர். 

தாக்குதல் சம்பவத்துக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மன்னிப்பு கேட்கும்வரை, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்களுடனான கூட்டங்கள் புறக்கணிக்கப்படும் என்று தில்லி அரசு அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், கேஜ்ரிவால் இல்லத்தில் இன்று திடீரென போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சம்பவ தினத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை அவர்கள் சேகரிக்க வந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது வீட்டை விட்டு வெளியேறி கேஜரிவால், செய்தியாளர்களிடம் பேசுகையில், இதேபோல நீதிபதி லோயா மரண விவகாரம் தொடர்பாகவும், அமித்ஷா வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்த வேண்டும் என ஆவேசமாக கூறினார். 

முதல்வர் கேஜரிவால் வீட்டில் போலீஸார் சோதனை நடத்தி வரும் சம்பவம் தில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com