48 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 48 மாதங்களில் நாங்கள் செய்துள்ளோம்: புதுச்சேரியில் மோடி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி ஆரோவில் பொன்விழா ஆண்டு சிறப்பு அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
48 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்யாததை 48 மாதங்களில் நாங்கள் செய்துள்ளோம்: புதுச்சேரியில் மோடி பேச்சு

புதுச்சேரி: புதுச்சேரி ஆரோவில் பொன்விழா ஆண்டு சிறப்பு அஞ்சல் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். இதனையடுத்து புதுச்சேரி சகோதர, சகோதரிகளே என்று தனது பேச்சை துவங்கிய மோடி, நீண்ட நாட்களுக்கு பிறகு புதுச்சேரி வந்துள்ளேன், 

இது சித்தர்கள் வாழ்ந்த பூமி ஆரோவில் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தமிழில் பேச தொடங்கிய அவர் கடந்த 50 ஆண்டுகளாக ஆரோவில் சிறந்த சமூக, கலாச்சார, ஆன்மிக பணிகளை ஆற்றி வருகிறது எனவும் சுதந்திர போராட்டத்தின்போது, சுனாமி வந்த போது என இரண்டுமுறை போராடியவர்கள் புதுச்சேரி மக்கள்.  புண்ணிய பூமியான புதுச்சேரியில் வாழும் நீங்கள் பாக்கியசாலிகள் எனவும் கூறினார்.  

’காஞ்சி’யையும் ’காசி’ யையும் தன் கவிதையின் மூலம் இணைத்தவர் மகாகவி பாரதியார். புதுச்சேரியில் ஆட்சியில் இருப்பவர்கள், மண்ணிற்கு அநியாயம் இழைத்திருக்கிறார்கள். புதுச்சேரியில் இளைஞர்கள் பெண்கள் முன்னேறுவதற்கான சூழல் நிலவுகிறதா? இங்கு ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறதா? புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு கடந்த 10 ஆண்டுகளாக தடைகள் உள்ளன. 48 ஆண்டுகள் ஆட்சி செய்த காங்கிரஸ் செய்யாததை 48 மாதங்களில் நாங்கள் செய்துள்ளோம். 

நாடுமுழுவதும் போக்குவரத்து துறை நவீனமயமாகிவரும் நிலையில் புதுச்சேரியில் மாறான நிலை. ஒரு காலத்தில் இங்கு செழிப்பாக இருந்த ஜவுளித்துறை தற்போது நெருகடியில் உள்ளது. புதுச்சேரியில் அனைத்து துறைகளும் தோல்வியடைந்து விட்டன. புதுச்சேரி மாநில பின்னடைவுக்கு காங்கிரஸ் கட்சி பதில் சொல்ல வேண்டும். நாம் முன்னேறுவதில் அரசு செயல்படும் விதத்திலே என்ன குறை உள்ளது என்பதை சிந்திக்க வேண்டும்.

நேரு குடும்பத்தின் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி புதுச்சேரியில் நடைபெறுவதாகவும் அனைத்து துறைகளிலும் புதுச்சேரி காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துவிட்டது. நியமன எம்.எல்.ஏக்களை ஜனநாயக கடமைகளை செய்யவிடாமல் தடுப்பது ஏன். தில்லியில் இருக்கும் காங்கிரஸ்காரர்கள் ஜனநாயகம் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். வரும் நாட்களில் வடமாநிலங்களிலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் தோற்றுவிடும். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒரே ஒரு முதல்வராக நாராயணசாமியை உதாரணமாக கூறும் நிலை ஏற்படும். ஏனெனில் இந்தியா முழுவதும் காங்கிரஸ் ஆளும் மாநிலம் எங்குமே இருக்காது. 

புதுச்சேரியில் பல ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடக்காதது ஏன். புதுச்சேரியை நவீனமயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தப்படும் புதுச்சேரி சுற்றுலாவின் சின்னமாக இருக்கிறது. புதுச்சேரியை ஸ்மார்ட் சிட்டியாக்கும் அமைப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இதற்காக 1,800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மருத்தவ கல்வி மையமாக புதுச்சேரியை மாற்றிவருகிறோம். ஜிப்மர் மோபாட்டுக்காக 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளோம். கடற்கரை சுற்றுலாவுக்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளோம். சுற்றுலா மையமான புதுசேரியை ஆன்மிக மையமாக ஆக்க முடியும். ஹைதராபாத், பெங்களூரில் இருந்து புதுச்சேரிக்கு உதான் சிறிய விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் தொழில் வளர்ச்சி மேம்படும்.

புதுச்சேரியில் மூன்று லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு முத்ரா திட்டம் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. பிரஞ்ச் அமைப்பின் மூலம் குடிநீர் வசதிக்காக 500 கோடி ரூபாயில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரி மட்டும்தான் ஜன்தன் யோஜனா திட்டத்தை 100 சதவீதம் நிறைவேற்றியுள்ளது. ஜன்தன்  யோஜனா திட்டத்தின் மூலம் 2.5 பேருக்கு காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 5 லட்சம் காப்பீடு கிடைக்கும். 

புதுச்சேரியில் 28 ஆயிரம் குழதைகளுக்கு டிஜிட்டல் முறையில் கல்வி கற்பிக்கப்படும். சாகர் மாலா திட்டங்களுக்காக துறைமுகங்கள் பலப்படுத்தப்படும். இது மீனவர்களுக்கு உதவும் திட்டம். புதிய இந்தியா உருவாவதை எந்த சக்தியாலும் தடுக்கமுடியாது என்று கூறினார். முன்னதாக பொன்விழா தபால்தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். விழாவில் முதல்வர் நாராயணசாமி, தமிழக கவர்னர் பன்வாரிலால், புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com