பனிமூட்டத்துடன் இணைந்த போகி புகைமூட்டத்தால் சென்னை ஸ்தம்பித்தது: விமானம், ரயில் சேவை முடங்கியது

பனிமூட்டத்துடன் இணைந்த போகி பண்டிகையின் புகைமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 
பனிமூட்டத்துடன் இணைந்த போகி புகைமூட்டத்தால் சென்னை ஸ்தம்பித்தது: விமானம், ரயில் சேவை முடங்கியது

சென்னை: பனிமூட்டத்துடன் இணைந்த போகி பண்டிகையின் புகைமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடினர். பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற பழமொழிக்கேற்ப பழைய பொருட்களை எரித்து போகியை மக்கள் கொண்டாடினர். பழைய பொருட்களை எரித்ததால் பனியுடன் புகை அதிகாலை முதல் சென்னையை திணற வைத்துவிட்டது. கடும் பனியுடன் கூடிய புகை மூட்டத்தின் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றனர். சுவாசிக்கக் கூட சிரமமாக உள்ள நிலையில் தற்போது காற்றின் தரம் உள்ளது. 

கடும் பனி மற்றும் புகை மூட்டத்தால், சென்னையில் விமானசேவை அதிகாலை 3 மணி முதல் முடங்கியுள்ளது. சென்னைக்கு வரவேண்டிய 18 விமானங்கள் சென்னையில் இறங்க அனுமதிக்கப்படாமல் பெங்களூர் மற்றும் ஹைதராபாத் போன்ற விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. 

சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 40க்கும் மேற்பட்ட விமானங்கள் காலை 8 மணிவரையில் புறப்படவில்லை. இதனால் சென்னைக்கு வர வேண்டிய மற்றும் சென்னையிலிருந்து கிளம்ப வேண்டிய விமான பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். 

பொங்கலுக்கு ஊருக்குச் செல்ல இருந்தவர்கள் விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர். பேருந்து ஸ்டிரைக் காரணமாக ஏராளமானோர் விமானத்தில் முன்பதிவு செய்திருந்தனர். சென்னையில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. 

பனி மூட்டம், போகியால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் சென்னையில் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாயினர். முகத்தில் கர்ச்சீப்பை கட்டியபடி இரு சக்கர வாகனங்கள் இயக்கியவர்களை பார்க்க முடிந்தது. காலையிலும் கூட கார், பைக்கில் சென்றோர் முகப்பு விளக்கு எரியவிட்டபடி வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. 

அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதியில் புகைமூட்டம் காணப்படுவதால் மின்சார ரயில்கள் வேகம் குறைத்து இயக்கப்பட்டது. சென்னை, அரக்கோணம் வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் அரை மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக சென்றன. 

இதனிடையே, காற்றின் தரம் குறித்து சென்னையின் 15 இடங்களில் ஆய்வு நடந்து வருகிறது என மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. 

சென்னையின், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தியாகராயநகர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவு மீண்டும் புகை மூட்டம் ஏற்படலாம் என்றும் தெரிகிறது.

ஆரணி மற்றும் திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கடும் பனி மூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

கடந்த ஆண்டும் இதேபோன்ற நிலை சென்னைக்கு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com