நீதிபதிகள் மோதல் விவகாரத்தில் வெளியாட்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை: நீதிபதி குரியன் ஜோசப்

உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நிர்வாகம் சரியில்லை. கடந்த சில மாதங்களில் பல்வேறு விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்றுள்ளன' என்று ...
நீதிபதிகள் மோதல் விவகாரத்தில் வெளியாட்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை: நீதிபதி குரியன் ஜோசப்

புதுதில்லி: உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகள் மோதல் விவகாரத்தில் வெளியாட்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்ற நிர்வாகத்தின் மூலமே பிரச்சினைகள் தீர்த்து கொள்ளப்படும் என நீதிபதி குரியன் ஜோசஃப் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோர் தில்லியில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென்று செய்தியாளர் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தனர். அப்போது தலைமை நீதிபதியின் செயல்பாடு குறித்து செலமேஸ்வர் உள்ளிட்ட நீதிபதிகள் மறைமுகமாகக் குற்றம்சாட்டினர். வழக்குகளை ஒதுக்குவதில் அவர் பாரபட்சம் காட்டுவதாகவும், மூத்த நீதிபதிகளான தங்களைத் தாண்டி வேறு நீதிபதிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை அவர் ஒதுக்குவதாகவும் அவர்கள் கூட்டாக குறைகூறினர்.

"உச்ச நீதிமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நிர்வாகம் சரியில்லை. கடந்த சில மாதங்களில் பல்வேறு விரும்பத்தகாத விஷயங்கள் நடைபெற்றுள்ளன' என்று நீதிபதி செலமேஸ்வர் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதியை நேரில் சந்தித்து இதைச் சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாகவும், எனினும் தங்கள் முயற்சி தோல்வியில் முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக தலைமை நீதிபதிக்கு அவர்கள் சில மாதங்களுக்கு முன் எழுதிய கடிதத்தையும் இந்தச் செய்தியாளர் சந்திப்பில் செலமேஸ்வர் உள்ளிட்ட 4 நீதிபதிகளும் வெளியிட்டனர். 

உச்ச நீதிமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ளமூத்த நீதிபதிகளின் மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் நீதிபதிகள், மூத்த வழக்குரைஞர்கள், அரசியல் கட்சிகள் கவலையை வெளியிட்டு வருகின்றன. 

இந்நிலையில், பார் கவுன்சில் எனப்படும் இந்திய வழக்குரைஞர்கள் சங்கத்தின் தலைவர் மனன் குமார் மிஸ்ரா தலைமையில் தில்லியில் நேற்று சனிக்கிழமை அவசரமாகக் கூடியது. அப்போது, நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கருத்து வேறுபாட்டைத் தீர்த்து வைத்து சமரசத்தை ஏற்படுத்தும் நோக்கில் இப்பிரச்னையில் சம்பந்தப்படாத மற்ற நீதிபதிகள் அனைவரையும் சந்திப்பதற்கு 7 உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. 
அந்தக் குழுவானது, தலைமை நீதிபதி மற்றும் அவரை எதிர்த்து போர்க்கொடி உயர்த்திய 4 நீதிபதிகளைத் தவிர, உச்ச நீதிமன்றத்தின் மற்ற அனைத்து நீதிபதிகளையும் சந்தித்து, பேச்சு நடத்தி சமரசத்தில் ஈடுபடுவார்கள் என்றும் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்க வேண்டாம் என்று அரசியல் கட்சிகளை வலியுறுத்தும் தீர்மானத்தை தாங்கள் இயற்றியதாகவும் மிஸ்ரா தெரிவித்தார்.

இதையடுத்து 7 பேர் அடங்கிய சமரச குழுவினர், இன்று இரவு 7.30 மணியளவில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி செலமேஸ்வரை அவரது இல்லத்தில் பார் கவுன்சில் குழு சந்தித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஏனைய மூத்த நீதிபதிகளையும் பார் கவுன்சில் குழு சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நான்கு நீதிபதிகளையும் சந்தித்து பேசுவார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், மூத்த நீதிபதிக விவகாரத்தில், வெளியாட்கள் தலையிட வேண்டிய அவசியமில்லை. நீதிமன்ற நிர்வாகத்தின் மூலமே பிரச்சினை தீர்த்து கொள்ளப்படும் என நீதிபதி குரியன் ஜோசஃப் கூறியுள்ளார்.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வரருடன், நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்கு பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா காரில் செல்லும் காட்சி தொலைக்காட்சிகளில் நேற்று சனிக்கிழமை ஒளிபரப்பானது. ஆனால், தீபக் மிஸ்ராவின் வீட்டு வாசல் கேட் திறக்கப்படவில்லை. வீட்டுக்கு வெளியே சிறிது நேரம் நின்ற அந்தக் கார் பின்னர் திரும்பிச் சென்றுவிட்டது.

இந்தக் காட்சி ஒளிபரப்பான பிறகு, தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்கு சிறப்புத் தூதுவரை (நிருபேந்திர மிஸ்ரா) பிரதமர் அனுப்பி வைத்தது ஏன்? இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்லியாக வேண்டும் என்று பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

புதிய விதிமுறைகள் வகுக்கும் வரை, மூத்த நீதிபதிகளுக்கு முக்கிய வழக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒருசில நீதிபதிகளுக்கு மட்டும் முக்கிய வழக்குகளை ஒப்படைக்கக் கூடாது என்று முன்னாள் நீதிபதிகள் சாவந்த், சந்துரு, ஏ.பி.ஷா, சுரேஷ் உள்ளிட்டோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com