தமிழகத்தை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும்: நடிகர் ராதாரவி பேட்டி

யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கட்டும். ஆனால் தமிழகத்தை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும்...
தமிழகத்தை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும்: நடிகர் ராதாரவி பேட்டி

திருவாரூர்: யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கட்டும். ஆனால் தமிழகத்தை தமிழர்கள் மட்டுமே ஆள வேண்டும் என்று நடிகர் ராதாரவி கூறினார். 

திருவாரூரில் திமுக நடத்திய மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
பாஜக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க குறுக்கு வழியில் செயல்படுகிறது.

தமிழகத்துக்கு அவமரியாதை என்றால் தமிழர்கள்தான் கேட்க வேண்டும். மொழியை காப்பாற்ற யாரால் முடியாதோ அவர்களால் கலாசாரத்தையும் காப்பாற்ற முடியாது. ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது நல்லது. இதுவரை வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சென்று நடித்து வந்துள்ளனர்.

தமிழகத்தைப் பற்றியும், மக்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளட்டும். ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பதற்கு பல வழிகளில் தேடியும் விடை கிடைக்கவில்லை. இதுகுறித்து யாரிடமாவது கேட்கலாம் என்று உள்ளேன். ரஜினி நல்லவர்களை கொண்டுதான் அரசியல் நடத்துவேன் என தெரிவித்துள்ளார். ஒருவேளை புத்தர், மகாவீரர் போன்றவர்களை அழைத்து வந்து அரசியல் நடத்துவார் என நினைக்கிறேன்.

விஷால் மிகவும் நல்லவர். ஆர்.கே.நகரில் 1,500 ஓட்டு என நினைத்து போட்டியிட சென்றுள்ளார். அவருக்கு கையெழுத்து போடுவதற்கு 10 பேர் கூட உடனில்லை என்பது வேதனைக்குரியது. அவரை பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்யிதில்லை.

கமல் நாளை நமதே என பிரசாரப் பயணத்தை தொடங்கி உள்ளார். அவரது ஊரையே அவர் பார்த்ததில்லை. எனவே, அவரது ஊரை முதலில் பார்க்க வேண்டும்.அங்குள்ள மக்களைச் சந்திக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் முதல்வராக தமிழன் மட்டுமே இருக்க வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமர் பதவியைப் பிறப்பால் இந்தியர்கள் மட்டுமே வகிக்க முடியும். அதேபோல், பிறப்பால் தமிழர்கள் மட்டுமே தமிழகத்தை ஆள வேண்டும் என்றார் ராதாரவி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com