ஜிஎஸ்டி வரி மேலும் குறைக்கப்படும்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகம்

2018-2019ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சரக்கு மற்றும்  சேவை வரி (ஜிஎஸ்டி) மேலும் குறைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர்
ஜிஎஸ்டி வரி மேலும் குறைக்கப்படும்: மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகம்

புதுதில்லி: 2018-2019ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சரக்கு மற்றும்  சேவை வரி (ஜிஎஸ்டி) மேலும் குறைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு சரக்கு மற்றும்  சேவை வரி (ஜிஎஸ்டி) வரி அமல்படுத்தப்பட்டது. இதற்காக 5, 12, 18 மற்றும் 28 சதவீத வரி விதிப்பின் கீழ் பொருட்கள் வகைப்படுத்தப்பட்டன. இந்த வரி அமலாக்கம் குறித்து விவாதிக்கவும், அது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கவும் ஜிஎஸ்டி கவுன்சிலும் அமைக்கப்பட்டது. 

ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதால் சில பொருட்களின் விலை உயர்ந்ததை தொடர்ந்து, பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்தது. எனவே, கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சில பொருட்களின் ஜிஎஸ்டி வரி விகிதத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டது. 

அதன்படி 28 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்த 178 பொருட்களுக்கு 18 சதவீதமாக குறைக்கப்பட்டன. 18 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்த 13 பொருட்கள் 12 சதவீதத்துக்கும், 12 சதவீதம் விதிக்கப்பட்டு இருந்த 8 பொருட்கள் 5 சதவீதத்துக்கும் மாற்றப்பட்டன. 

மேலும் 18 சதவீதத்தில் இருந்த 6 பொருட்கள் 5 சதவீத வரிக்கு மாற்றப்பட்டதுடன், 5 சதவீதத்தில் இருந்த 6 பொருட்கள் பூஜ்ஜிய சதவீதத்துக்கும் குறைக்கப்பட்டன. 

தற்போதைய நிலையில், பாவப்பொருட்களும், ஆடம்பர பொருட்களுக்கும் மட்டுமே 28 சதவீத வரி விதிக்கப்படுகிறது. 

200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைத்தன் மூலம், குறைந்தபட்சமாக நவம்பர் மாதத்துக்கும் முந்தைய மாதத்தில் ரூ.80,808 கோடியாக இருப்பினும், செப்டம்பரில் ரூ.92,150 கோடியும், அக்டோபரில் ரூ.83 ஆயிரம் கோடியும், டிசம்பரில் ரூ.86,703 கோடியும் வசூல் ஆகியுள்ளது. அதன் பின்பு தற்போது மாறி வருவாய் அதிகரிக்க தொடங்கியுள்ளது என்றும் ஜிஎஸ்டி வரி மேலும் குறைக்கப்படும் என நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்துள்ளார். 

2018-2019-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், சர்வதேச சுங்க தினத்தையொட்டி தில்லியில் நேற்று சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில், ‘நாட்டின் பொறுளாதா வளர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் ஜிஎஸ்டி நாட்டின் மறைமுக வரி அமைப்பை ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். 

பல்வேறு நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகவும் குறுகிய காலகட்டத்தில் ஜிஎஸ்டி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அதன் தளத்தை விரிவுபடுத்தவும், கட்டமைப்பை ஒழுங்குபடுத்தவும் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கிறது’ என்றார். இதன் மூலம் வருங்காலத்தில் ஜிஎஸ்டி வரி மேலும் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. 

மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு சரக்கு சேவை வரிக் குறைப்பு மற்றும் வரிச்சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் பொதுப்போக்குவரத்தில் 100 சதவீதமும் தனிப் போக்குவரத்தில் 40 சதவீத வாகனங்களும் மின்சாரத்தால் இயக்கப்பட வேண்டும் என அரசு இலக்கு குறித்துள்ளது. இந்த இலக்கை அடைய உதவும் வகையில் பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் வரிச்சலுகை இருக்கும் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com