உ.பி.யில் தொடர் கலவரம்: காஸ்கஞ்ச் நகரில் 144 தடை உத்தரவு; 49 பேர் கைது

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இருபிரிவினரிடையே 2வது நாளாக மோதல் தொடர்ந்ததால் வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு
உ.பி.யில் தொடர் கலவரம்: காஸ்கஞ்ச் நகரில் 144 தடை உத்தரவு; 49 பேர் கைது

உத்தரபிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் பகுதியில் இருபிரிவினரிடையே 2வது நாளாக மோதல் தொடர்ந்ததால் வன்முறையை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குடியரசு தினத்தை (ஜன. 26) முன்னிட்டு, காஸ்கஞ்ச் நகரில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர், ஏபிவிபி அமைப்பினர் இருசக்கர வாகனங்களில் பேரணி சென்றனர். அப்போது, அவர்கள் மீது மர்ம நபர்கள் சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞருக்கு நேற்று இறுதிச்சடங்கு நடைபெறும் போது மீண்டும் வன்முறை வெடித்தது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பேருந்துக்குத் தீ வைக்கப்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது. காஸ்கஞ்ச் நகரில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நீடித்து வருகிறது என்று அந்த மாநில அரசின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். கலவரம் தொடர்பாக இதுவரை 9 பேரைக் கைது செய்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து காவல் துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கடைகளுக்குத் தீ வைக்க சில சமூக விரோத சக்திகள் முயன்றன. அவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்றார்.

இந்நிலையில், பாதுகாப்பிற்காக அங்கு மத்திய படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூட்டங்கள் நடத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவமால் தடுக்க செல்லிடை பேதி இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக இதுவரை 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமாதானத்தினற்கான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் சார்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com